வீழ்ந்தது பிரான்ஸ்!! ஸ்பெயின் இறுதிக்கு முன்னேற்றம்!

டெக்சாஸ், ஜூலை 16-
டெக்சாஸில் நடைபெற்ற ஃபிஃபா உலகக் கோப்பை அரையிறுதியில் பிரான்ஸை 2-0 என்ற கோல்கள் கணக்கில் ஸ்பெயின் அணி வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

ஸ்பெயின் அணிக்கு மிகேல் ஓயர்சபால் பெனால்டி கிக்கில் கோல் அடித்து முன்னிலை கொடுக்க, பிறகு 58ஆவது நிமிடத்தில் பெட்ரோ போரோ அற்புதமான கோலை அடித்தார். அதுவே வெற்றி கோலாக அமைந்தது.

ஸ்பெயின் தனது ஆதிக்கமான ஆட்டத்தின் மூலம் பிரான்ஸை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, 2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

நட்சத்திர வீரர்கள் நிரம்பிய பிரான்ஸ் அணி, போட்டி முழுவதும் ஸ்பெயின் கொடுத்த அழுத்தத்துக்குப் பதிலளிக்க முடியாமல் ஏமாற்றமளித்தது.

போட்டியின் தொடக்கம் முதலே பந்தை அதிக நேரம் தக்கவைத்துக் கொண்ட ஸ்பெயின், பிரான்சின் தாக்குதல் வரிசைக்கு எந்தவித வாய்ப்பையும் வழங்கவில்லை. குறிப்பாக கூடுதல் நேரத்தில் கைலியன் எம்பாப்பே எடுத்த கடைசி முயற்சி கோல் கம்பத்திற்கு மேலாக பறந்தபோது, அவரது முகத்தில் தெரிந்த ஏமாற்றம் தெரிந்தது.

20ஆவது நிமிடத்தில் ஸ்பெயினுக்கு பெனால்டி கிடைத்தது. பிரான்ஸ் இடது பக்க தற்காப்பு வீரர் லூகாஸ் டின்யே, ஸ்பெயின் இளம் நட்சத்திரம் லமின் யமாலை பெனால்டி பகுதியில் தவறுதலாகத் தடுத்ததாக நடுவர் தீர்ப்பளித்தார்.

அந்த வாய்ப்பை மைக்கேல் ஒயர்சபால் கோலாக மாற்றி ஸ்பெயினை 1-0 என முன்னிலைக்கு கொண்டு சென்றார்.

முதல் பாதியில் தொடர்ந்து தவறுகள் செய்த பிரான்ஸ் அணிக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டது. 30ஆவது நிமிடத்தில் முதுகு காயம் காரணமாக பிரான்சின் சென்டர்-பேக் வில்லியம் சாலிபா களத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இடைவேளைக்குப் பிறகு பிரான்ஸ் சற்று முன்னேற்றம் கண்டாலும், அந்த வேகத்தை ஸ்பெயின் விரைவில் முறியடித்தது.

வலது பக்க தற்காப்பு வீரர் பெட்ரோ போரோ, மத்தியநிலை வீரர் டானி ஒல்மோவுடன் அழகிய ‘ஒன்-டூ’ பாஸ் பரிமாற்றத்தை மேற்கொண்டு, கோல்கீப்பர் மைக் மேன்யானை எளிதாக ஏமாற்றி இரண்டாவது கோலை வலைக்குள் செலுத்தினார்.

ஸ்பெயினின் தந்திரத்துக்கு பதில் சொல்ல முடியாத பிரான்ஸ் தடுமாறியது.

போட்டி முழுவதும் உத்தி ரீதியான திறனையும், பந்துக் கட்டுப்பாட்டையும் ஆயுதமாக பயன்படுத்திய ஸ்பெயின், பிரான்ஸின் வேகமான எதிர்தாக்குதலை முற்றிலும் முடக்கியது.

பிரான்ஸ் நடுக்கள வீரர்களான அட்ரியன் ரபியோ மற்றும் ஓரேலியன் சுவாமேனி ஆகியோர் ஸ்பெயின் மிட்ஃபீல்டின் ஆதிக்கத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. மேலும், ஸ்பெயினின் இடைவிடாத அழுத்தமான தடுப்பாட்டம் காரணமாக பிராட்லி பார்கோலா, ஒஸ்மான் டெம்பேலே மற்றும் கைலியன் எம்பாப்பே ஆகியோரின் வேகத்தை பயன்படுத்தி எதிர்தாக்குதல் நடத்தும் வாய்ப்பையும் பிரான்ஸ் இழந்தது.

இறுதியில் ஸ்பெயின் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles