
புத்ராஜெயா, ஜூலை 15 –
மலேசிய இந்தியச் சமூகத்தின் கல்வி மற்றும் ஆன்மீகக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதில் மடானி அரசாங்கம் காட்டி வரும் தீவிர அக்கறையை உறுதிப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் உள்ள 162 பாலர் பள்ளிகள் மற்றும் 168 இந்து கோவில்களுக்கு மொத்தம் 12.23 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி ஒதுக்கப்பட்டுள்ளது.
மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவின் (மித்ரா) வாயிலாகச் செயல்படுத்தப்படும் இந்த முக்கியத் திட்டங்களின் நாடு தழுவிய அமலாக்கம் இன்று மெனாரா பெர்கெசோவில் நிறைவு பெற்றது.
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் சார்பாக, அமைச்சின் கொள்கை மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் சுதேக்னோ அகமது பெலோன் மற்றும் மித்ரா தலைமை இயக்குநர் கே. ரவீந்திரன் நாயர் ஆகியோர் பயனாளிகளுக்கு ஒப்புதல் கடிதங்களை வழங்கினர்.

பாலர் கல்விக்குக் கரம் கொடுக்கும் அரசு, மித்ராவின்
‘செலிக் மடானி’ திட்டத்தின் கீழ், 162 பாலர் பள்ளிகளுக்கு 8.87 மில்லியன் ரிங்கிட் நிதிக்கான ஒப்புதல் கடிதங்களை வழங்கியது. இது பி40 பிரிவைச் சேர்ந்த 3,612 இந்தியச் சிறுவர்களின் கல்விப் பயணத்திற்குப் பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது.
ஒவ்வொரு குழந்தையும் 11 மாதங்களுக்கு தலா 230 ரிங்கிட் வீதம் மானியம் பெறுவர்; இதில் 150 ரிங்கிட் கல்விக் கட்டணமாகவும், 80 ரிங்கிட் சத்தான உணவுக்காகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
“சமூகத்தின் மாற்றத்திற்கு அடித்தளமே பாலர் கல்விதான்; இந்த நிதியுதவி ஏழை எளிய குடும்பங்களுக்கு அவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதி செய்ய உதவும்” என்று அமைச்சர் ரமணன் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

‘தர்ம மடானி’ திட்டத்தின் மூன்றாவது தொடரின் கீழ், 168 இந்து கோவில்களுக்கு 3.36 மில்லியன் ரிங்கிட் நிதிக்கான ஒப்புதல் கடிதங்கள் இன்று வழங்கப்பட்டன.
இதன் மூலம், நடப்பாண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 627 இந்து கோவில்களுக்கு மொத்தம் 12.54 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கோவிலும் தலா 20,000 ரிங்கிட் நிதி பெற்றுள்ளது. இக்கோவில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்களாக மட்டும் நின்றுவிடாமல், சமயக் கல்வி, சுய முன்னேற்றம் மற்றும் சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் மையங்களாகச் செயல்பட இந்த நிதி வித்திடும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான மடானி அரசாங்கம் இந்தியச் சமூகத்திற்கு எவ்வித உதவியும் செய்யவில்லை என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அமைச்சர் ரமணன் திட்டவட்டமாக மறுத்தார்.
“அரசாங்கம் இந்தியச் சமூகத்திற்காக எந்த நிதியையும் ஒதுக்கவில்லை என்றும், மித்ரா முடங்கிவிட்டதாகவும் சிலர் அவதூறு பரப்புகின்றனர். நான் இங்கு எதையும் தற்பெருமைக்காகச் சொல்லவில்லை, அவதூறுகளைத் தகர்த்து உண்மைகளை எடுத்துரைக்கவே இந்தத் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன்” என்று அவர் ஆணித்தரமாகக் கூறினார்.
கடந்த 2023-ஆம் ஆண்டிலிருந்து மித்ரா முன்னெடுத்துள்ள பல்வேறு திட்டங்களைச் சுட்டிக்காட்டிய அவர், 315 தமிழ்ப் பள்ளிகளில் இலவசக் கல்விக்கான ‘கல்வி மடானி’ திட்டத்திற்கு 8 மில்லியன் ரிங்கிட், உயர்கல்வி பயிலும் 3,000 இந்திய மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் ‘பெராந்தி சிஸ்வா’ திட்டத்திற்கு 7.95 மில்லியன் ரிங்கிட் மற்றும் ஸ்மார்ட் போர்டு உபகரணங்களுக்கு 5 மில்லியன் ரிங்கிட் எனத் தொடர்ச்சியான உதவிகள் வழங்கப்பட்டு வருவதை நினைவுபடுத்தினார்.
இந்தியச் சமூகத்தின் கல்வி மற்றும் பொருளாதாரத் தடைகளைத் தகர்த்து, ஒரு வலுவான எதிர்காலத்தை உருவாக்க அரசு முன்னெடுத்துள்ள இந்தச் செயல்பாடுகள், இந்தியச் சமூகத்தின் மீதான அரசாங்கத்தின் மாறாத அக்கறையைத் தெளிவாகப் பறைசாற்றுகின்றன.

