


தெலுக் இந்தான், ஜூன் 11 –
சவால்களை விரும்பும் மோட்டார் சைக்கிள் ஆர்வலர்களின் கனவுப் பயணங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தியாவின் லடாக் மலைப்பகுதியை நோக்கி தெலுக் இந்தானைச் சேர்ந்த அன்சன் மோட்டார் கிளப் உறுப்பினர்கள் விரைவில் புறப்படவுள்ளனர்.
எதிர்வரும் ஜூன் 18 முதல் ஜூன் 27 வரை நடைபெறவுள்ள இந்த சாகசப் பயணத்திற்கான ஏற்பாடுகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்ற நிலையில் அன்சன் மோட்டார் கிளப்பின் உறுப்பினர்களான திணேஷ் ராவ் முனியாண்டி, குணசேகரன் பாலன், நிக்கோலஸ் அம்ப்ரோஸ், எஸேக்கியேல் பான்செமின், ஷசிதரன் தேவராஜா ஆகியோர் இந்தப் பயணத்தில் பங்கேற்கின்றனர்.
இளைஞர்கள் மத்தியில் நீண்ட தூர மோட்டார் சைக்கிள் சவாரியை ஆரோக்கியமான, பயனுள்ள பொழுதுபோக்காக ஊக்குவிப்பதே தங்களது முக்கிய நோக்கம் என அவர்கள் அனைவரும் தெரிவித்தனர்.
உயரமான மலைப்பாதைகள், சவாலான சாலை அமைப்புகள், இயற்கை எழிலால் உலகப் புகழ்பெற்ற லடாக், பல மோட்டார் சைக்கிள் சவாரி ஆர்வலர்களின் விருப்பப் பட்டியலில் முக்கிய இடம் வகிக்கிறது. அந்த அனுபவத்தை நேரடியாகச் சந்தித்து புதிய நினைவுகளைச் சேர்க்கும் வாய்ப்பாக இந்தப் பயணத்தை அவர்கள் கருதுகின்றனர்.
இதற்கு முன்னர் தாய்லாந்து, மியான்மார், லாவோஸ் ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதிகள் வரை பல சாகசப் பயணங்களை மேற்கொண்டுள்ள அனுபவமும் தங்களுக்கு இருப்பதாக அவர்கள் கூறினர். அந்தப் பயணங்கள் பல்வேறு நாடுகளின் கலாசாரங்களை அறிந்துகொள்வதற்கும், புதிய நட்புறவுகளை உருவாக்குவதற்கும் வழிவகுத்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்த முறை லடாக்கின் கடினமான காலநிலை மற்றும் உயரமான மலைப்பாதைகள் தங்களின் உடல், மன உறுதியை மேலும் சோதிக்கும் என எதிர்பார்ப்பதாகவும், அதேவேளையில் பொறுமை, ஒழுக்கம் மற்றும் இயற்கையின் மீது மரியாதை போன்ற பண்புகளை வலுப்படுத்தும் அனுபவமாகவும் அமையும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
பயணத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிள்களின் தொழில்நுட்ப பரிசோதனைகள், பாதுகாப்பு உபகரணங்களின் தயார்நிலை, உடல்தகுதி தொடர்பான முன்னேற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறினர்.
அவ்வகையில், லடாக் பயணத்திற்குப் பின்னர் வரும் டிசம்பர் மாதத்தில் இலங்கையை நோக்கிய மற்றொரு மோட்டார் சைக்கிள் சாகசப் பயணத்தையும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்
கனவுகளை அடைவதற்கான முதல் முயற்சியை மேற்கொள்ளத் துணிந்தால், பயணமே பல பாடங்களை கற்றுத்தரும் என்ற நம்பிக்கையுடன் இளைஞர்கள் தங்களது இலக்குகளை நோக்கி முன்னேற வேண்டும் என அன்சன் கிளப் உறுப்பினர்கள் தெலுக் இந்தானைச் சேர்ந்த இளைஞர்களுக்கு
அழைப்பு விடுத்துள்ளனர்.

