
ஷா ஆலம், ஜூன் 10 – சிலாங்கூர் மாநில அரசாங்கம், பௌத்த, கிறிஸ்தவ, இந்து, சீக்கிய மற்றும் தாவோ மதங்களுக்கான சிலாங்கூர் சிறப்புக் குழுவின் (லீமாஸ்) வழியாக, மாநிலம் முழுவதும் உள்ள 128 பௌத்த மற்றும் தாவோ சங்கங்களுக்கு 1.29 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நிதியுதவிகளை விநியோகம் செய்துள்ளது.
இது குறித்துப் பேசிய லீமாஸ் அமைப்பின் கூட்டுத் தலைவரான இங் ஸீ ஹான், இதுவரை தங்களின் குழுவிற்கு வந்த விண்ணப்பங்களில் 130 விண்ணப்பங்களுக்கு முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கென மொத்தம் 1.39 மில்லியன் ரிங்கிட் நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் இதனை விவரித்த அவர், நடப்பாண்டில் லீமாஸ் அமைப்பிற்குச் சிலாங்கூர் மாநில அரசு 8 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது என்றும், அதில் 3.62 மில்லியன் ரிங்கிட் நிதியானது பௌத்த மற்றும் தாவோ மத அமைப்புகளுக்காகவே பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
கடந்த ஜூன் 4ஆம் தேதி வரை தங்களின் குழுவிற்கு மொத்தம் 318 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகக் கூறிய இங் ஸீ ஹான், மீதமுள்ள விண்ணப்பங்களையும் மிக விரைவாகப் பரிசீலித்து, அவற்றுக்கான நிதியுதவிகளை உடனுக்குடன் வழங்குவதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

