மலேசியாவும் ஜப்பானும் கூட்டுப் பங்களிப்பை வழங்க முடியும் – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்

தோக்கியோ, ஜூன் 10 – பிராந்திய அளவில், குறிப்பாகக் குறைக்கடத்தி தொழில் துறையில் விநியோகச் சங்கிலியை (Supply Chain) மேலும் வலுப்படுத்துவதற்கு மலேசியாவும் ஜப்பானும் மிகச் சிறந்த பயனுள்ள பங்களிப்பை வழங்க முடியும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

குறைக்கடத்தி துறையின் சோதனை மற்றும் மேம்பட்ட பேக்கேஜிங் ஆகிய பிரிவுகளில் மலேசியா கொண்டுள்ள அசாத்திய திறனானது, ஜப்பான் முன்னிலை வகிக்கும் அதிநவீனப் பொருட்கள், உபகரணங்கள் மற்றும் மேம்பட்ட உற்பத்தித் திறனுக்குக் கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் வழி இன்னும் வலுவான மற்றும் ஒருங்கிணைந்த ஒரு தொழில்நுட்பப் பொருளாதார மண்டலத்தை உருவாக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜப்பான், தோக்கியோவில் இன்று நடைபெற்ற “அதிக மீள்திறன் மற்றும் வளமான ஆசியாவை நோக்கி இணைந்து செயல்படுதல்” எனும் கருப்பொருளைக் கொண்ட 31ஆவது நிக்கேய் மாநாட்டில் (Nikkei Forum), “மூலோபாய நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்ளுதல்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றிய போது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் மலேசியாவும் ஜப்பானும் இணைந்து அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளதாக அவர் ஆணித்தரமாகக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து எரிசக்தித் துறை குறித்துப் பேசிய பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த நெருக்கமான ஒத்துழைப்பானது, பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் எரிசக்திப் பாதுகாப்பைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளும் அதே வேளையில், குறைந்த கார்பன் பயன்பாட்டை நோக்கிய ஆசியாவின் ஆற்றல் மாற்றத்திற்கும் (Energy Transition) பெரும் ஆதரவாக இருக்கும் என்றார்.

`Asia Zero Emission Community` போன்ற கூட்டு முயற்சிகள், சுற்றுச்சூழல் நல்வாழ்வும் நாட்டின் பொருளாதார மேம்பாடும் எவ்வாறு கைகோர்த்துப் பயணிக்க முடியும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது உரையில் விவரித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles