
சிரம்பான் ஜூலை 26-
ஜெம்போலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், பெரிக்காத்தான் நேஷனல் (PN) தேர்தல் இயக்குநரும், கெடா மந்திரி பெசாருமான டத்தோஸ்ரீ சனுசி நோர், மலேசிய இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் முறையே இந்தியா, சீனா உள்ளது. மலாய்க்காரர்களுக்கு இந்நாடு மட்டுமே என்று கூறியிருப்பது, இந்நாட்டின் மீது இந்திய, சீன இன மக்களுக்கு உள்ள உரிமையை மறுப்பதற்கு ஒப்பாகும்.
மலேசியாவின் பல இன ஒற்றுமைக்கு எதிரானதாகும். இதற்கு முன்னர், பாஸ் தலைவர் டான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங், மலாய்க்காரர் அல்லாதவர்களை “பெண்டாத்தாங்” (குடியேறிகள்) என்று குறிப்பிட்டிருந்தார்.
இவை தனிப்பட்ட கருத்துக்கள் அல்ல; அக்கட்சி தலைவர்கள் மற்ற இனங்கள் மீது கொண்டிருக்கும் வஞ்சனையை, மாசுபடிந்த பிற்போக்கு வாத விஷத்தை இரு வேறு இடத்தில் ஒரே மாதிரியாக உமிழ்ந்து உள்ளதையே காட்டுகிறது.
.தேர்தல் அரசியலில் மட்டும் இனவாதத்தைப் பயன்படுத்துவதாக அல்லாமல் தாய் மொழி பள்ளி எதிர்ப்பு குழு மற்றும் இந்நாட்டில் மற்ற சமயத்தளங்கள் இருப்பதையும் எதிர்க்கும் (GERAH) கிரா போன்ற இயக்கங்களின் பிறப்பிடமாகவும், இன தீவிரவாதத்தின் பாசறையே பாஸ் கட்சியினர்தான் என்பதை நிரூபிப்பதாக உள்ளது.
ம.இ.கா. தலைவர் தன் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன், இத்தகைய கருத்துக்களுடன் தொடர்புபடுத்தப்படும் கூட்டணியில் BN இடம் பெறுவதில் உள்ள சிரமத்தை ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
PN கூட்டணியில் உள்ள MIPP கட்சியின் தலைவருக்கு கூட, இந்திய மலேசியர்களின் தாயகம் மலேசியாதான் என்பதை வலியுறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியர்களின் வாக்குகளைக் கோரும் ம.இ.கா., அதே இந்தியர்களை இந்த நாட்டின் உரிமையாளர்களாக ஏற்க மறுக்கும் கருத்துக்களை முன்வைக்கும் அரசியல் அணியுடன் இணைந்து செயல்படுவது ஒரு முரண் பாடாகும்.
மலேசிய இந்தியர்கள் இந்த நாட்டில் தங்களுக்கான இடத்தை தீர்மானிப்பதில் எந்த அரசியல் தலைவரின் கருணை, யாசகம் அல்லது அனுமதிக்கு காத்திருக்க வேண்டியதில்லை.
தலைமுறை தலைமுறையாக உழைத்து, வரி செலுத்தி, நாட்டின் விடுதலைக்கு, பாதுகாப்புக்கு உயிரை அர்பணித்து, எங்கள் உதிரத்தை நாட்டு வளர்ச்சிக்கு உரமாக்கிய இனம் நாங்கள், இந்நாட்டின் பங்காளிகள், எங்களின் உரிமை , விசுவாசம் மீதும் கேள்வி எழுப்ப பாஸ் மற்றும் அதன் எந்த தலைவருக்கும் அருகதை இல்லை என வலியுறுத்தினார் சங்கீதா.
ஆகஸ்ட் 1 ஆம் தேதி நெகிரி செம்பிலான் வாக்காளர்கள் தங்களின் எதிர் காலத்தைத் தீர்மானிக்கவுள்ளனர். பக்காத்தான் ஹரப்பான், எந்த ஒரு இனவாத சமரசமும் இன்றி, 36 தொகுதிகளிலும் தனித்து மக்களின் ஆதரவை நாடுகிறது.
ஒரு குடிமகனின் இந்த நாட்டிற்கான உரிமை, அவரது இன அடையாளத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட கூடாது என்பதே எங்களின் உறுதியான நிலைப்பாடாகும்.
அதை ஆமோதிக்கும் தீர்ப்பாக நெகிரி செம்பிலான் வாக்காளர்களின் ஓட்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி இருக்க வேண்டும் என்பது எல்லா மலேசியர்களின் எதிர்பார்ப்பாகும், அதுவே பாஸ் கட்சி போன்ற பிற்போக்குவாத சக்திகளுக்கு வழங்கப்படும் மரண அடி என கெ அடிலான் மகளிர் தேசியச் செயலாளர் ஜெ. சங்கீதா ஜெயக்குமார் கூறினார்.

