செயற்கை நுண்ணறிவுத் துறைகளில் மலேசியாவின் வளர்ச்சிக்கு ஜப்பானின் ஆதரவு அவசியம் – பிரதமர்

கோலாலம்பூர், ஜூன் 10 – குறைக்கடத்தி (Semiconductor), செயற்கை நுண்ணறிவு (AI), குவாண்தம் கம்ப்யூட்டிங் (Quantum Computing) மற்றும் மேம்பட்ட பேக்கேஜிங் (Advanced Packaging) போன்ற அதிநவீனத் தொழில்நுட்பத் துறைகளில் மலேசியா தனது திறன்களை வளர்த்துக் கொள்வதற்கு ஜப்பான் அரசாங்கத்திடமிருந்தும் அந்நாட்டுத் தொழில் துறையிடமிருந்தும் ஆதரவு மிகவும் முக்கியமானது என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களை உள்வாங்குவதன் மூலம், மலேசியா பாரம்பரிய பொருளாதார வளர்ச்சித் துறைகளைத் தாண்டி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து வருவதோடு, பிராந்திய குறைக்கடத்தி மையமாகத் தனது பங்கை வலுப்படுத்தி வருகிறது என்றும் அவர் கூறினார்.

ஜப்பான், தோக்கியோவில் இன்று நடைபெற்ற புகழ்பெற்ற ‘நிக்கேய் மாநாட்டில்’ (Nikkei Forum) சிறப்புரையாற்றியதைத் தொடர்ந்து நடைபெற்ற கேள்வி-பதில் அமர்வின் போது பிரதமர் இதனைத் தெரிவித்தார். இந்த நிகழ்வு தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

குறைக்கடத்தி துறையில் மலேசியா தற்போது பிராந்தியத்தின் முக்கிய மையமாக உருவெடுத்துள்ளதாகவும், வெறும் ஆரம்பக்கட்ட தயாரிப்புகள் மட்டுமன்றி, தற்போது மேம்பட்ட பேக்கேஜிங் போன்ற அதிநவீன உயர்நிலைத் தயாரிப்புகளிலும் நாடு கவனம் செலுத்தி வருவதால், இதில் ஜப்பானியத் தொழில்துறையின் ஒத்துழைப்பும் ஆதரவும் மிக இன்றியமையாதது என்றும் சுட்டிக்காட்டினார்.

`Quantum` தொழில்நுட்பத் துறையிலும் மலேசியா தனது ஆற்றலை மேம்படுத்தி வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், இத்துறையில் ஏற்கனவே முன்னணியில் இருக்கும் சர்வதேசப் பங்காளிகளிடமிருந்து மலேசியா பல விஷயங்களைக் கற்றுக்கொண்டு வருவதாகக் கூறினார்.

தொழில்நுட்பத்திற்கு அப்பால், நாட்டின் அடுத்தகட்டப் பொருளாதார வளர்ச்சியை உயர்த்தும் மற்றொரு முக்கியக் காரணியாக ‘ஆற்றல் மாற்றம்’ (Energy Transition) விளங்குவதாகத் தெரிவித்த அவர், மலேசியாவின் வலுவான எரிசக்தித் துறையும், பெட்ரோனாஸ் (Petronas) நிறுவனத்தின் பங்களிப்பும் இதற்குப் பெரும் பலமாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

மேலும், வியட்நாம், லாவோஸ், சிங்கப்பூர் மற்றும் சரவாக் அரசாங்கங்களின் ஆதரவோடு, ‘ஆசியான் மின்சாரக் கட்டமைப்பு’ (ASEAN Power Grid) திட்டத்தை நோக்கி மலேசியா மிக வலுவாக நகர்ந்து வருவதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

புதிய நவீனத் தொழில்நுட்பத் துறைகளில் தடம் பதிக்கும் அதே வேளையில், நாட்டின் பொருளாதார உருமாற்றத்தை விரைவுபடுத்தி, மலேசியாவை ஓர் அதிக வருமானம் பெறும் நாடாக மாற்றுவதற்குப் பாரம்பரிய வளர்ச்சித் துறைகளும் தொடர்ந்து தக்கவைக்கப்படும் என்று அன்வார் இப்ராஹிம் உறுதியளித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles