
கோலாலம்பூர், ஜூன் 11-
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் உலகளவில் வேலைச் சூழலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வரும் வேளையில், மனிதநேயத்தை மையமாகக் கொண்ட எதிர்கால வேலைவாய்ப்புச் சூழலை உருவாக்குவதில் மலேசியா உறுதியுடன் இருப்பதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்ற 114-வது சர்வதேச தொழிலாளர் மாநாட்டின் (ஐஎல்சி) முழு அமர்வில் பேசிய அவர், உரிமைகள், சமத்துவம், வளர்ச்சியை உறுதி செய்வது அவசியம் என்றார்.
தொழில்நுட்பம் என்பது மனித கண்ணியத்தையும் கண்ணியமான வேலைவாய்ப்பையும் மேம்படுத்தும் போது மட்டுமே முன்னேற்றமாக கருதப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஏஐ தொழில்நுட்பம் சமூகத்தில் மாற்றங்களை கொண்டு வந்துவிட்டது என்பதை மறுக்க முடியாது. ஆனால் அந்த மாற்றம் நியாயமானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், மனித கண்ணியத்திற்கு முன்னுரிமை அளிப்பதாகவும் இருப்பதை உறுதி செய்வதே உண்மையான சவாலாக உள்ளது என்று அவர் கூறினார்.
மலேசியாவின் அணுகுமுறை ‘மடானி’ கொள்கையின் அடிப்படையில் அமைந்திருப்பதாகவும், இதில் கருணை, நீதி மற்றும் மனிதநேயம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வலியுறுத்துவது போல, மதிப்பீடுகள் இல்லாத தொழில்நுட்பம் ஏற்றத்தாழ்வுகளையும் பிளவுகளையும் மட்டுமே அதிகரிக்கும் என்று குறிப்பிட்ட ரமணன், எதிர்கால வளர்ச்சி என்பது இயந்திரங்களால் அல்லாமல், மனிதர்களை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்றார்.
மலேசியாவின் 17 மில்லியனுக்கும் அதிகமான பணியாளர்களை ஏஐ பொருளாதாரத்திற்குத் தயார்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
இதன் ஒரு பகுதியாக, தொழில்முறை மற்றும் மேம்பட்ட திறன் பயிற்சி மையத்தின் (CIAST) கீழ் ஏஐ மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

மேலும், 2026-2030 காலத்திற்கான தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார முதன்மைத் திட்டம், ஏஐ மற்றும் ஆட்டோமேஷனால் ஏற்படும் புதிய பணியிட அபாயங்களை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் இடர் மதிப்பீட்டு முறை மூலம் இதுவரை சுமார் 270,000 பயனர்கள் பயனடைந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.
தொழில்துறை நீதியை வலுப்படுத்துவதற்காக, மலேசிய தொழில் நீதிமன்றம் ஏஐ தொழில்நுட்பம் மற்றும் நிகழ்நேர டிஜிட்டல் பதிவு முறைகளைப் பயன்படுத்தி நவீனமயமாக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் நீதிமன்றங்களிலும் 2030-க்குள் இந்த டிஜிட்டல் முறைகள் முழுமையாக அமல்படுத்தப்படும்.
மேலும், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழிலாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதை ஊக்குவிக்க, மைமாஹிர் (MyMahir) -தேசிய ஏஐ கவுன்சில் மூலம் ஏஐ மற்றும் சைபர் பாதுகாப்புப் பயிற்சிகளுக்கான செலவில் கூடுதல் 50 சதவீத வரி விலக்கு வழங்கப்படுகிறது என்றார் அவர்.
‘MYFutureJobs’ தளம் மூலம் 2020-ஆம் ஆண்டு முதல் 1.49 மில்லியன் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

சமூகப் பாதுகாப்பு தொடர்பாக, ஜூன் 1, 2026 நிலவரப்படி, சுமார் 10 மில்லியன் முறைசார் துறை தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு அமைப்பின் (பெர்கெசோ) 24 மணிநேர விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இது 1969-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக பணியிடத்திற்கு அப்பாற்பட்ட பாதுகாப்பையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

