

கெர்லிங், ஜூன் 12–
இளம் வயதிலேயே மாணவர்களின் விளையாட்டுத் திறமைகளை கண்டறிந்து அவர்களை எதிர்கால கிரிக்கெட் வீரர்களாக உருவாக்கும் நோக்கில் உலு சிலாங்கூர் மாவட்டக் கல்வி வட்டாரம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, உலு சிலாங்கூர் மாவட்ட ஆரம்பப்பள்ளிகளுக்கான 2026ஆம் ஆண்டு கிரிக்கெட் விளையாட்டு மேம்பாட்டுத் திட்டம் அண்மையில் கெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் வெற்றிகரமாக நடைபெற்றது.
உலு சிலாங்கூர் மாவட்டத்திலுள்ள ஒன்பது தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 36 மாணவர்களும் ஒன்பது ஆசிரியர்களும் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி, மாணவர்களிடையே கிரிக்கெட் விளையாட்டின் மீதான ஆர்வத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் தனித்திறன்களை வெளிக்கொணரும் ஒரு சிறந்த தளமாகவும் அமைந்தது.
மாவட்டப் பயிற்றுநர் ஆசிரியர் இரா. இளங்கோவின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற பயிற்சிகளில், கிரிக்கெட் விளையாட்டின் அடிப்படை நுட்பங்கள், உடல் தகுதி மேம்பாடு, குழு ஒத்துழைப்பு, போட்டி மனப்பான்மை ஆகிய அம்சங்கள் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியை கெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் நாராயணன் சண்முகவேன் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் ஜமாலுடினும் கலந்து கொண்டு மாணவர்களின் விளையாட்டு வளர்ச்சிக்கான தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.
இத்தகைய பயிற்சித் திட்டங்கள் மாணவர்களின் ஒழுக்கம், தலைமைத்துவம், தன்னம்பிக்கை , உடற்திறனை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன என தலைமையாசிரியர் நாராயணன் தெரிவித்தார்.
மேலும், மாவட்டம், மாநிலம், தேசிய நிலையில் சாதனைகள் படைக்கும் திறமைமிக்க வீரர்களை உருவாக்குவதற்கான அடித்தளமாக இந்நிகழ்ச்சிகள் அமைகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
விளையாட்டின் மூலம் மாணவர்களை ஆரோக்கியமான, ஒழுங்குமுறையான வாழ்க்கை முறைக்கு வழிநடத்தும் இந்த முயற்சி, உலு சிலாங்கூர் மாவட்டத்தில் இளம் கிரிக்கெட் திறமைகளை உருவாக்கும் முக்கிய நடவடிக்கையாகப் பாராட்டப்படுகிறது.

