



மழையிலும் மங்காத பக்தி… 5,000-க்கும் மேற்பட்டோர் தரிசனத்தில் பரவசம்!
தெலுக் இந்தான், ஜூன் 17 –
இடைவிடாமல் பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு, பேராக் மாநிலம் தெலுக் இந்தான் 5ஆவது மைல், நோவா ஸ்கோஷியா பிரிவு 1 தோட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஸ்ரீ குபேரலிங்கேஸ்வரர் சுவாமியின் நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவில் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டனர்.
இன்று காலை 10.15 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற்ற இந்த மகா கும்பாபிஷேக விழாவிற்கு, இத்தோட்ட மண்ணின் மைந்தரும், தொழிலதிபரும், ஆலய அறங்காவலருமான பாலகிருஷ்ணன் முத்துசாமி தலைமை தாங்கிய நிலையில் விழா முழுவதும் ஆன்மிக உணர்வும் பக்தி நிறைந்த சூழலும் நிலவியது.
தமிழகத்தைச் சேர்ந்த P.T. சங்கர் சிவாச்சாரியார் தலைமையில், மலேசியா, தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த மொத்தம் 10 சிவாச்சாரியார்களும், குருக்கள்மார்களும் ஆகம விதிமுறைகளின்படி யாக பூஜைகள், கலச பூஜைகள், கும்பாபிஷேக சடங்குகளை மிகுந்த சிறப்புடன் நடத்தினர்.
தொடர்ந்து, ஆலய கோபுர கலசங்களுக்கு புனித கலசநீர் அபிஷேகம் செய்யப்பட்டபோது, “ஓம் நமசிவாய” என்ற பக்தி முழக்கத்தால் ஆலய வளாகமே அதிர்ந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அந்த அரிய தருணத்தை பக்தி பரவசத்துடன் கண்டு சிவபெருமானின் அருளைப் பெற்றனர்.
கும்பாபிஷேக நிகழ்வின் போது இடைவிடாமல் மழை பெய்தபோதிலும், பக்தர்கள் யாரும் அங்கிருந்து விலகாமல் இறை வழிபாட்டில் ஈடுபட்டனர். மழை அவர்களின் இறைநம்பிக்கையையோ பக்தி உணர்வையோ துளியும் குறைக்க முடியவில்லை என்பது நிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்தது.
மேலும், நோவா ஸ்கோஷியா பிரிவு 1 தோட்டத்தில் வாழ்ந்து தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் குடியேறிய முன்னாள் தோட்டவாசிகளும் தங்கள் குடும்பத்தினருடன் திரளாக பங்கேற்றனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் சொந்த ஊர் ஆலயத்தில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தில் ஒன்றுகூடியது அவர்களுக்கு நெகிழ்ச்சியான அனுபவமாக அமைந்தது.
வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற இந்த ஆன்மிக விழா பக்தர்களின் மனதில் அழியாத நினைவுகளைப் பதித்தது. நாட்டின் புகழ்பெற்ற அறிவிப்பாளர் கவிமாறனும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, முழு நிகழ்வையும் சிறப்பாக வழிநடத்தினார்.

