
கோலாலம்பூர், ஜூன் 17-
ஜசெக கட்சியின் செனட்டர் Dr Lingeshwaran R. Arunasalam கூறுகையில், Universiti Pendidikan Sultan Idris (UPSI) பெயரில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் ‘புதிய சகோதரர் (முவாலஃப்) பதிவு’ போஸ்டர் தொடர்பான விவகாரம் முழுமையான, வெளிப்படையான மற்றும் சுயாதீனமான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றார்.
அவரின் கூற்றுப்படி, அந்தப் போஸ்டர் பல்வேறு சமூகங்களிடையே கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
காரணம், அதில் UPSI-யின் பெயரும் அடையாளமும் பயன்படுத்தப்பட்டதுடன், மலேசியாவின் பன்முக சமூக அமைப்பில் மிகவும் உணர்வுபூர்வமான ஒரு விஷயத்தையும் அது தொடுகிறது.
“இந்தப் போஸ்டர் பல்கலைக்கழக நிர்வாகத்தின் பரிசீலனை அல்லது ஒப்புதலுக்காக ஒருபோதும் சமர்ப்பிக்கப்பட வில்லை என்றும், UPSI-யின் எந்த அதிகாரப்பூர்வ தளங்களிலும் வெளியிடப்பட வில்லை என்றும் பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.
இருப்பினும், வெறும் மறுப்புச் செய்தி மட்டுமே மக்களின் கவலையைத் தணிக்க போதுமானதல்ல.
“இந்தப் போஸ்டரை உருவாக்கியவர், அங்கீகரித்தவர் மற்றும் பரப்பியவர் யார் என்பதை கண்டறிய முழுமையான, வெளிப்படையான மற்றும் சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
விசாரணையின் முடிவுகளும் பொதுமக்களிடம் வெளியிடப்பட வேண்டும். அதுவே வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தி, பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க உதவும்,” என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும், பல்கலைக்கழகத்தின் பெயர் மற்றும் அடையாளம் தவறாக பயன்படுத்தப்பட்டிருந்தாலோ அல்லது அதிகாரப்பூர்வ அனுமதியின்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலோ, அதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“பொறுப்புக்கூறல் மற்றும் கணக் கொப்பளிப்பு என்ற அடிப்படைக் கொள்கைகளில் இருந்து யாரும் விலக்கு பெறக்கூடாது,” என்றார்.
அதேவேளை, இந்த விவகாரத்தை Kementerian Pendidikan Tinggi (KPT) மற்றும் மடானி அரசாங்கம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் அவர் கூறினார்.
இது சமூக உணர்வுகளையும், ஒரு பொது உயர்கல்வி நிறுவனத்தின் நற்பெயரையும் பாதிக்கும் விவகாரம் என்பதால், எந்தவித தலையீடும் இன்றி முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
“மரியாதைக்குரிய பொது உயர்கல்வி நிறுவனமாக விளங்கும் UPSI-யின் நம்பகத்தன்மை, நேர்மை மற்றும் கல்வி அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கை ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும்.
“பல இனங்களும் பல மதங்களும் வாழும் நாட்டில், அனைவரும் பொறுப்புணர்வுடனும் விவேகத்துடனும் செயல்பட்டு, சமூக உணர்வுகளை மதிப்பதன் மூலம் தேசிய நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் பாதுகாக்க வேண்டும்,” என டாக்டர் லிங்கேஷ்வரன் வலியுறுத்தினார்.

