
ஹூஸ்டன், ஜூன் 19: உலகக் கிண்ணக் காற்பந்து வரலாற்றில் ஆறாவது முறையாகக் களம் கண்ட நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி, தனது முதல் ஆட்டத்திலேயே ஏமாற்றத்தைச் சந்தித்துள்ளது.
டெமாக்ரடிக் ரிபப்ளிக் ஆஃப் காங்கோ (DRC) அணிக்கு எதிரான ‘குரூப் கே’ பிரிவின் விறுவிறுப்பான லீக் ஆட்டம் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கோல் கணக்கில் சமனில் முடிவடைந்தது. இதன் மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் காங்கோ அணி தனது முதல் புள்ளியைப் பதிவு செய்து புதிய சரித்திரம் படைத்துள்ளது.
முன்னதாக, 1974ஆம் ஆண்டு ‘ஜாயர்’ (Zaire) என்ற பெயரில் உலகக் கிண்ணத்தில் விளையாடியதற்குப் பிறகு, மிக நீண்ட இடைவெளிக்குப் பின் இந்தத் தொடருக்குத் தகுதி பெற்றுள்ள காங்கோ அணி, போர்ச்சுகல் போன்ற பலம் வாய்ந்த அணிக்கு எதிராக இறுதிவரை மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
ஆட்டத்தின் ஆறாவது நிமிடத்திலேயே போர்ச்சுகல் அணியின் ஜோவோ நெவ்ஸ் (Joao Neves), பெட்ரோ நெட்டோ (Pedro Neto) வழங்கிய பந்தைப் பாஸ் செய்து மிக அருமையான கோல் ஒன்றை அடித்தார். இதனால் போர்ச்சுகல் அணி ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.
இருப்பினும், பந்தைத் தன் வசம் வைத்திருந்த போதிலும் போர்ச்சுகல் அணியால் மேற்கொண்டு கோல் அடிக்க முடியாமல் திணறியது. இதனைச் சாதகமாக்கிக் கொண்ட காங்கோ அணி, முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் பதிலடி கொடுத்தது. நியூகாஸில் அணியின் முன்கள வீரரான யோவான் விசா (Yoane Wissa), எவ்விதத் தடையுமின்றி பந்தைத் தலையால் முட்டி போர்ச்சுகலின் கோல் போஸ்ட்டிற்குள் அனுப்பினார்.
உலகக் கிண்ணத் தொடரில் காங்கோ அணி பெற்ற முதல் கோல் இது என்பதால், மைதானத்தில் இருந்த அந்நாட்டு ரசிகர்களும் வீரர்களும் எல்லையற்ற மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக் கொண்டாடினர். இந்த ஆட்டத்தை முக்கியப் பிரமுகர்கள் வரிசையில் அமர்ந்திருந்த போர்ச்சுகல் அணியின் முன்னாள் தற்காப்பு அரண் பேபே (Pepe) இதனால் பெரும் அதிருப்தி அடைந்தார்.
மறுபுறம், 41 வயதான போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த ஆட்டம் முழுவதும் பெரிய அளவில் பிரகாசிக்கத் தவறினார்.

