மலேசியாவிற்கு நீண்டகால எரிபொருள் விநியோகம்; ரஷ்யாவுடன் உடன்பாடு எட்டப்பட்டதாகப் பிரதமர் தகவல்

கசான், ஜூன் 19: மலேசியாவிற்குத் தேவையான பெட்ரோல், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றை நீண்டகால அடிப்படையில் தடையின்றி விநியோகம் செய்ய ரஷ்யா உத்தரவாதம் அளித்துள்ளதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இந்த முக்கிய உடன்பாட்டின் மூலம், ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட வேண்டிய தற்காலிக ஒப்பந்தங்களை மலேசியா இனி நம்பியிருக்க வேண்டியதில்லை. நாட்டின் எரிசக்தி விநியோகப் பாதுகாப்பு இதன் வழி முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கான வரைவு அறிக்கை ஏற்கனவே தயாராக உள்ளது என்றும், கொள்கை அளவில் இருநாடுகளும் உடன்பட்டுள்ளதால், அதிகாரிகள் குழு இதன் விவரங்களை மறுஆய்வு செய்து கையெழுத்திடுவதற்காக மட்டுமே காத்திருப்பதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.

மலேசியாவுடன், குறிப்பாகப் பெட்ரோனாஸ் (Petronas) நிறுவனத்துடன் எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு மாஸ்கோ வழங்கிய ஆதரவிற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்குப் பிரதமர் அன்வார் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

மலேசியா மற்றும் ரஷ்யா இடையிலான இருதரப்பு உறவுகள் தற்பொழுது வர்த்தகம், முதலீடு, நிதி மற்றும் ஹலால் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கும் விரிவடைந்துள்ளதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

மலேசியாவின் தற்போதைய உள்நாட்டு எண்ணெய் விநியோகம் குறித்துப் பேசிய பிரதமர், விலை மாற்றங்களால் சில தாக்கங்கள் ஏற்பட்டாலும், விநியோகத்தைப் பொறுத்தவரை அரசாங்கத்திற்கு எவ்விதப் பிரச்சனையும் இல்லை என்று உறுதியளித்தார்.

கடந்த காலங்களில் டீசல் மற்றும் எரிவாயு விநியோகத்தில் சில பிரச்சனைகள் இருந்த போதிலும்கூட, தற்பொழுது மூன்று வகையான எரிபொருட்களும் போதிய அளவில் கையிருப்பில் உள்ளன என்று அவர் கூறினார்.

முன்பு விநியோக ரீதியாக மிகவும் சிக்கலானது எனக் கருதப்பட்ட டீசல், தற்பொழுது உள்நாட்டுத் தேவைக்கும் அதிகமாக இருக்கும் நிலையை எட்டியுள்ளது என்று பிரதமர் அன்வார் சுட்டிக்காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles