

பத்துகாஜா,ஆக04: நம் இனம் தொன்மையிலும் பாரம்பரிய பண்பாட்டிலும் பழமையான வரலாற்றைக் கொண்டது என்றுரைத்த பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் வ.சிவகுமார் நமது பாரம்பரிய முறைகளையும் வாழ்வியல் தேவைகளையும் இன்றைய தலைமுறையும் கற்றுணர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
பத்துகாஜா நாடாளுமன்ற சேவை மையத்தில் நடைபெற்ற “பாரம்பரிய இந்தியப் பிரசவ காலப் பராமரிப்பு சிகிச்சை” குறித்த திறன் மேம்பாட்டு பயிலரங்கை தொடக்கி வைத்து பேசுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நம் முன்னோர்கள் பிரசவ காலப் பராமரிப்பில் பெரும் கவனம் செலுத்தியதோடு மட்டுமின்றி தாய்-செய் நலனையும் பாரம்பரிய முறையில் ஆரோக்கியமான சூழலில் பேணி காத்தனர்.அந்தப் பாரம்பரிய முறைதான் இன்றைக்கு நம்மை ஆரோக்கியமாய் வைத்துள்ளது என்றும் நினைவுறுத்திய அவர் இதுபோன்ற பாரம்பரியமும் தொன்மையான சிகிச்சை முறையும் நம் இனத்தின் காலத்தின் சான்றாகும் என்றார்.
இதுபோன்ற பயிற்சிகள் இன்றைய சூழலில் அவசியமானது.நமது மூத்த தலைமுறைகள் இன்று நம் வீட்டில் இல்லாமல் இருக்கலாம்.ஆனால்,நமது அடுத்த தலைமுறைக்கு இந்தப் பாரம்பரிய முறையை கற்றுக்கொடுக்கவும் எடுத்து சொல்ல ஒவ்வொரு வீட்டிலும் ஒருவர் இம்முறையை அறிந்து வைத்திருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் மாண்புமிகு சிவகுமார் தெரிவித்தார்.
இப்பயிற்சியின் வாயிலாக நம் பாரம்பரியத்தோடு அதுசார்ந்த அறிவையும் கற்று கொள்வதோடு குடும்ப வருமானத்தைப் பெருக்க சிறந்த முதலீடாகவும் இது அமைவதாக கூறினார்.
அதுமட்டுமின்றி,நம் இனத்தின் பாரம்பரிய சிகிச்சை முறை பாதுகாக்கவும் இம்மாதிரியான பயிற்சிகள் வழிசெய்வதோடு குடும்பத்தின் சமூக – பொருளாதார நிலையை மேம்படுத்தவும் பெரும் வாய்ப்பினை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
இதனை வெறும் பயிற்சியாக மட்டும் எண்ணாமல் இதனை தொழில்முனைவு வாய்ப்பாக கருத வேண்டும் எனவும் வலியுறுத்திய சிவகுமார் அர்ப்பணிப்பு,தொடர் பயிற்சி மற்றும் தரமான சேவையுடன் செயல்பட்டால்,பிரசவ காலப் பராமரிப்பு சிகிச்சைத் துறை பெரும் வளர்ச்சிக்குரிய வாய்ப்புகளை உருவாக்குவதோடு வெற்றிகரமான பெண் தொழில்முனைவோரையும் அது உருவாக்கும் என்று தனது நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்த்தினார்.
இம்முறை ஏற்பாடு செய்யப்பட்ட பயிலரங்கில் 20 பெண்கள் கலந்து கொண்டதாகவும் இனி வருங்காலங்களில் இந்த எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்ட அவர் பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் புதிய சிந்தனைகளையும் நவீன மாற்றங்களையும் ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும் எனவும் நினைவுறுத்தினார்.

