
Netflix மூலம் உலகப் புகழ்பெற்ற கனடிய தமிழ் நடிகை “செல்வி மைத்ரேயி இராமகிருசுணன் அவர்கள், “நான் ஈழத் தமிழ் பெண்” என தனது பூர்வீக அடையாளத்தை பெருமையுடன் வெளிப்படுத்தியதற்காக, சிங்கள இனவெறியர்கள் சர்வதேச அளவில் இணையவழி வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதை உலகத் தமிழர் பாதுகாப்புச் செயலகம் வன்மையாகக் கண்டிக்கிறதென அதன் ஒருங்கிணைப்பாளர் திரு.பாலமுருகன் வீராசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழீழத்தை பூர்வீகமாகக் கொண்டு கனடாவில் பிறந்த மைத்ரேயி, “Never Have I Ever” தொடர் மூலம் உலகளவில் அறிமுகமானவர். தற்போது Netflix-இல் வெளியாகியுள்ள “Best of the Best” திரைப்படத்தில் ‘மாயா’ கதாபாத்திரத்தில் முன்னணி வேடத்தில் நடித்துள்ளார்.
இப்படத்திற்காக பரதநாட்டியம் உட்பட நடனப் பயிற்சி பெற்றதாகவும், அது கதாபாத்திரத்தை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவியதாகவும் சமீபத்திய நேர்காணலில் அவர் தெரிவித்திருந்தார்.
“தமிழராக இருப்பதில் பெருமை கொள்கிறேன்” என அவர் தனது அடையாளத்தை வெளிப்படையாகப் பகிர்ந்ததைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் அவர் மீது தனிநபர் தாக்குதல்களும், அவரை சிறுமைப்படுத்தும் அவதூறுகளும் பரப்பப்பட்டு வருகின்றன.
“இத்தகைய இனவெறி தாக்குதல்களிலிருந்து அவரைப் பாதுகாக்க உலகத் தமிழர்களும், உலகத் தமிழர் பாதுகாப்புச் செயலகமும் உறுதுணையாக நிற்போம்” என திரு.பாலமுருகன் வீராசாமி தமது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

