2021 தேர்தல் அறிக்கையில் 97 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா?தேமு, அதனை நிரூபிக்க வேண்டும் 

Foto: Bernama

மலாக்கா, நவ 8-

மலாக்கா மாநிலத்தில் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது, தேசிய முன்னணி வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளில் 97 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படுவதை, உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும் என்று பக்காத்தான் ஹராப்பான்  மலாக்கா தலைவர் டத்தோஸ்ரீ அட்லி ஸாஹாரி வலியுறுத்தியுள்ளார்.

கடந்த தேர்தலில் ஆண்டுக்கு 10,000 வேலைவாய்ப்புகள் வீதம், ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 50,000 வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக BN வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், நடப்புத் தேர்தலுக்கான புதிய தேர்தல் அறிக்கையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 25,000 வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்படும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய இலக்கைவிட 50 சதவீதம் குறைவாக இருப்பதாக அட்லி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேபோல், ஒவ்வொரு மாநிலத் தொகுதி மேம்பாட்டு மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவுக்கும் (JAPERUN) இலவச ஆம்புலன்ஸ் வழங்குவதாக முந்தைய தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதியும், தற்போதைய தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புக்கும் ஓர் ஆம்புலன்ஸ் வழங்குவது எனக் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும், மாதந்தோறும் 20 கன மீட்டருக்கும் குறைவான வீட்டு உபயோக நீருக்கு இலவசக் கட்டணம் என்ற திட்டம், PH ஆட்சிக் காலத்திலேயே 2018ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

எனவே, புதிய வாக்குறுதிகளை வழங்குவதற்கு முன்னதாக, கடந்த தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை BN தெளிவுபடுத்த வேண்டும் என்று அட்லி வலியுறுத்தினார். தேர்தல் வாக்குறுதிகள் வெறும் அறிவிப்புகளாக இல்லாமல், மக்களுக்கு உண்மையான பலன்களை வழங்கியுள்ளனவா என்பதை வாக்காளர்கள் மதிப்பிடுவதற்கு உரிய விளக்கங்களும் ஆதாரங்களும் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles