
மலாக்கா, நவ 8-
மாநிலத் தேர்தலில் இளைஞர்களுக்கு அரசியல் தலைமைத்துவப் பொறுப்புகளை ஏற்க அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று அங்காத்தான் மூடா கெஅடிலான் வலியுறுத்தியுள்ளது.
புதிய தலைமுறையினருக்கு வாய்ப்பளிப்பது கட்சியின் எதிர்காலத் தலைமைத்துவத்தை உறுதிப்படுத்தும் என AMK துணைத் தலைவர் டாக்டர் முகமட் தௌஃபிக் ஜொஹாரி தெரிவித்துள்ளார்.
பக்காத்தான் ஹராப்பான் இம்முறை தேர்தலில் இளம் வேட்பாளர்களைக் களமிறக்கியிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றும், அவர்களின் தலைமைத்துவத் திறனையும் ஆற்றலையும் வெளிப்படுத்த இது சிறந்த வாய்ப்பாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, ஆயர் மோலேக் தொகுதியில் முகமட் ஹக்கிமின் மொக்தார், கிளேபாங் தொகுதியில் பர்ஸானா ஹயானி முகமட் நாசிர் மற்றும் கோலா லிங்கி தொகுதியில் முகமட் முக்லிசுல் முபின் ஜூலாசபியா ஆகிய இளம் வேட்பாளர்களை PH முன்னிறுத்தியுள்ளது. இவர்களின் பங்கேற்பு புதிய தலைமுறையினரின் அரசியல் பங்களிப்பை வலுப்படுத்தும் என அவர் தெரிவித்தார்.
இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பது வயதை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல; அவர்களின் தலைமைத்துவத் திறன், பொறுப்பேற்கும் ஆற்றல் மற்றும் மக்களுக்குச் சேவையாற்றும் தகுதி ஆகியவையும் முக்கியம் என தௌஃபிக் கூறினார். மலாக்கா மக்கள் தகுதியான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து, மாநிலத்தின் எதிர்காலத் தலைமைத்துவ வளர்ச்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

