
மலாக்கா, நவ 8-
மலாக்கா மாநிலத்தின் 16ஆவது சட்டமன்றத் தேர்தலில் இளம் வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையைச் சரியான முறையில் பயன்படுத்தி, உண்மையான தகவல்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும் என பிகேஆர் மலாக்கா மாநிலத் தலைவர் பொறுப்பு வகிக்கும் ஆடம் அட்லி அப்துல் ஹலிம் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, தேர்தலில் வாக்களிக்கும்போது அரசியல் உணர்வுகள், வெறுப்பு அரசியல் மற்றும் தவறான தகவல்களால் இளைஞர்கள் திசைதிருப்பப்படக் கூடாது என்றும், நேர்மையும் நம்பகத்தன்மையும் கொண்ட தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மலாக்கா மாநிலத்தில் மொத்தம் 6,87,697 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில், 18 முதல் 39 வயதுக்குட்பட்ட இளம் வாக்காளர்கள் 47.34 விழுக்காட்டினர் ஆவர். எனவே, மாநிலத்தின் எதிர்கால அரசாங்கத்தைத் தீர்மானிப்பதில் இளைஞர்களுக்கு மிக முக்கியமான பங்கு இருப்பதாக ஆடம் அட்லி குறிப்பிட்டார். மேலும், ஜனநாயகச் செயல்பாடுகளில் இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்பது மலாக்காவின் எதிர்காலத்திற்கு நம்பிக்கையளிப்பதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையில், இம்முறை பிகேஆர் போட்டியிடும் 10 சட்டமன்றத் தொகுதிகளில் ஏழு புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். தொகுதிகளுக்கு ஏற்ற வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதுடன், அடிமட்டத் தொண்டர்களின் ஆதரவையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

