விசா விலக்கு : மலேசியாவில் வேலை தேடப் பயன்படுத்த வேண்டாம் : இந்திய தூதரகம் எச்சரிக்கை

கோலாலம்பூர், செப் 24 – மலேசியாவின் 30 நாள் விசா விலக்கு சலுகையைப் பயன்படுத்தி வேலைத் தேடும் இந்திய நாட்டு மக்களுக்கு எதிராக, கோலாலம்பூரில் உள்ள இந்திய உயர் ஆணையம் எச்சரித்துள்ளது.

பொய்யான வேலை வாய்ப்புகளை நம்பி மலேசியாவிற்கு வருகை தரும் நபர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதை அடுத்து, அந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த விசா விலக்கு , இந்தியப் பயணக் கடப்பிதழ் வைத்திருப்பவர்கள் மலேசியாவில் 30 நாட்கள் வரை தங்க அனுமதி அளிக்கப்படுகிறது. எனினும் அந்த அனுமதி சுற்றுலா மற்றும் சமூகப் பயணங்களுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த அனுமதியை வேலை தேடுவதற்காகப் பயன்படுத்துவது குடிநுழைவுத் துறையின் விதிமீறலாகுமென மலேசியாவுக்கான இந்திய உயர் ஆணையம் தெரிவித்தது.

” பொறுப்பற்ற முகவர்களால் பொய்யான வேலை வாய்ப்பை நம்பி மலேசியாவிற்கு வரும் இந்திய நாட்டவர்கள் இங்கு அனுமதிக்கப்பட்ட கால கட்டத்தைக் காட்டிலும் அதிக காலம் தங்குவது, தடுத்து வைப்பது , சட்ட நடவடிக்கை எடுப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு ஆளாகின்றனர்.” என இந்திய உயர் ஆணையம் குறிப்பிட்டது.

வேலைக்கான முறையான பெர்மிட் அனுமதி அல்லது குறிப்புடன் கூடிய விசா ( VDR) போன்ற ஆவணங்கள் இன்றி வேலைக்காக இந்திய நாட்டவர்கள் மலேசியாவிற்கு பயணிக்கக் கூடாது எனவும் அவ்வாணையம் கேட்டுக் கொண்டது.

” சுற்றுப் பயணிகள் வந்திறங்கும்போது குடிநுழைவு பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்காக , திரும்புவதற்கான டிக்கெட், ஹோட்டல் முன் பதிவு, வந்திறங்கும் தேதிக்கு முன்னதாக 3 தினங்களுக்கு முன்பே மலேசிய டிஜிட்டல் வருகை அட்டையை (MDAC) இணையம் வாயிலாக சமர்பிப்பது , குறைந்தபட்சம் 6 மாதம் செல்லுபடியாகும் பயணக் கடப்பிதழை வைத்திருப்பது போன்ற உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களை வைத்திருப்பது அவசியம்” என இந்திய உயர் ஆணையம் தெரிவித்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles