
கோலாலம்பூர், ஜூன் 24- கிள்ளான் பள்ளத்தாக்கில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளுக்காக 150 ரிங்கிட் மதிப்பிலான புதிய டிஜிட்டல் மாதாந்திர பயண அட்டையை (Rapid Monthly Pass) ரெப்பிட் கே.எல் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த அட்டையை Touch ‘n Go eWallet செயலி மூலம் நேரடியாக வாங்கி கொள்ளலாம். 30 நாட்கள் செல்லுபடியாகும் இந்த பயண அட்டை மலேசியர்கள், வெளிநாட்டவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என அனைவருக்கும் கிடைக்கும்.
இதைப் பயன்படுத்த NFC வசதி கொண்ட ஸ்மார்ட்போன் மற்றும் புதுப்பிக்கப்பட்ட செயலி அவசியமாகும்.
இந்த ஒரே அட்டையின் மூலம் MRT, LRT, KL Monorail, Sunway BRT உள்ளிட்ட ரயில் சேவைகள், மேலும் ராபிட் கே.எல் பேருந்துகள் மற்றும் MRT பேருந்துகளில் வரம்பற்ற பயணங்களை மேற்கொள்ளலாம்.
இந்த டிஜிட்டல் முறைக்கு மாற விரும்பாத பயணிகளுக்கு, வழக்கம்போல ரெப்பிட் கே.எல் ரயில் நிலையங்களின் கவுண்ட்டர்களில் நேரடியாகச் சென்று இயற்பியல் அட்டைகளை (Physical passes) வாங்கும் வசதியும் தொடர்ந்து நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

