பேராவில் ஆரோக்கியமான இலக்கிய நகர்விற்கு பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் பொது இயக்கங்களுடன் கைகோர்க்கும் – சிவாலெனின்!!

ஈப்போ,ஜூன்24: பேரா மாநிலத்தில் இனம்,மொழி சார்ந்த முன்னெடுப்புகளுக்கும் ஆரோக்கியமான இலக்கிய நகர்வுகளுக்கும் பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் இங்குள்ள பொது இயக்கங்களுடன் கைகோர்த்து பயணிக்கும்.

அண்மையக் காலமாய் ஈப்போவில் பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் பேரா மாநிலத் தமிழர் திருநாள் இயக்கத்தின் தோழமையுடன் நிறைய நூல் வெளியீடுகளும் கலந்துரையாடல்களும் நடைபெற்று வருவதை சுட்டிகாண்பித்து பேசிய போது சிவாலெனின் இவ்வாறு குறிப்பிட்டார்.

எழுத்தாளர் தமிழ்மணி புலவர் சு.மேகநாதனின் விழித்தெழும் சிந்தனைகள் நூல் வெளியீடு நிகழ்ச்சியில் உரையாற்றுகையில் சிவாலெனின் இவ்வாறு கூறியதோடு அண்மையக் காலமாய் ஈப்போவில் அதிகமான நூல் வெளியீடுகள் நடைபெற்று வருவது ஆரோக்கியமான இலக்கிய நகர்வாய் பார்ப்பதாகவும் அம்முயற்சியில் பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் ஓர் அங்கமாய் இருப்பதில் பெருமிதம் கொள்வதாகவும் கூறினார்.

மேலும், எழுத்தாளர் மேகநாதனின் விழுத்தெழும் சிந்தனைகள் நூல் குறித்து பேசுகையில் பன்முகத் தலைவர்களின் பங்களிப்பு,அவர்களின் அர்ப்பணிப்பு,செயல்பாடுகள் குறித்தும் பேசியுள்ள எழுத்தாளர் இன்றையத் தலைமுறைகளுக்கு அத்தலைவர்களையும் அவர்களின் செயல்பாடுகளையும் அறியும் களமாகவும் இந்நூலை உருவாக்கியிருப்பதாக குறிப்பிட்டார்.

ஈப்போ மேடான் இஸ்தானாவில் நடைபெற்ற இந்நூல் வெளியீடுக்கு சிறப்பு வருகை அளித்த சட்ட்த்துறை துணை அமைச்சர் மாண்புமிகு எம்.குலசேகரன் புத்தகம் என்பது வாசகனின் சிந்தனையைத் தூண்ட வேண்டும்.அவனுள் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.வாசகனின் சிந்தனைத் தூண்டும் புத்தகங்களே ஆக சிறந்த புத்தகங்களாகும் என்று நினைவுறுத்தினார்.

ஒவ்வொரு நூலும் ஒரு எழுத்தாளனின் சிந்தனையின் வெளிப்பாடு.எழுத்தாளனின் எழுத்து வெறும் கற்பனையாக மட்டுமே இல்லாமல் சமூகத்தின் உணர்வுகளாகவும் நம் சமூகத்தின் வளர்ச்சி மேம்பாட்டுடன் சமுதாயத்தை தட்டியெழுப்பும் பெரும் ஆயுதமாகவும் திகழ வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
எழுத்தாளர் மேகநாதனின் இந்நூல் சமுதாயத்தின் சிந்தனையைத் தூண்டக்கூடிய ஒன்றாக திகழ்வதாகவும் குறிப்பிட்ட அவர் இந்நூலை மாணவர்களிடையே கொண்டு சேர்க்க வேண்டியது நம் கடமை என்றார்.அவ்வகையில் ஈப்போ பாராட் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட தமிழ்ப்பள்ளிகளுக்கு இந்நூலை தாம் வழங்குவதாக அறிவித்து நூலையும் பெற்று கொண்டார்.

இந்நூல் வெளியீடு நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற பேரா மாநிலத் தமிழர் திருநாள் இயக்கத்தின் தோற்றுநர் வழக்கறிஞர் ம.மதியழகன் இந்நூலில் இடம் பெற்றிருக்கும் தமிழ் கலைச்சொற்கள் குறித்து பேசியதோடு தனித்தமிழில் பேசுவதும் எழுதுவதும் அவசியமானது எனவும் குறிப்பிட்டார்.

மேலும், இந்நூலின் ஒவ்வொரு தலைப்பும் வாசகனுக்கு நல்லதொரு சிந்தனை தெளிவை ஏற்படுத்துவதோடு அவனை ஆழமாய் சிந்திக்கவும் வைக்கிறது.இந்நூல் சில இடங்களில் பாடம் நடத்துகிறது.சில இடங்களில் ஆலோசனையை வழங்குகிறது என்றும் விவரித்த அவர் இந்நூல் ஒவ்வொருவரும் கட்டாயம் வாங்கி வாசிக்க வேண்டிய ஒன்று எனவும் தனதுரையில் கூறினார்.

மிகவும் சிறப்பாக நடந்தேறிய இந்நூல் வெளியீடு நிகழ்ச்சியை நேர்த்தியாக ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றத்தில் தலைவர் கவிஞர் அருள் ஆறுமுகம் வழிநடத்த சமூக ஆர்வலர் கி.மணிமாறனின் வரவேற்புரையும் கவிஞர் ந.கு.முல்லைச் செல்வனின் வாழ்த்துரையும் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles