

உறவினர்களால் கைவிடப்பட்ட முதிய தம்பதியினருக்கு, கரம் நீட்டிய பீடோர் அன்பு இல்லம்
தெலுக் இந்தான், ஜூன் 24 –
வயோதிக காலத்தில் அமைதியான வாழ்க்கையை எதிர்பார்த்திருந்த ஒரு முதிய தம்பதியரின் கனவுகள், உறவினர்களின் புறக்கணிப்பும் சேமிப்புப் பண இழப்பும் காரணமாக சிதைந்த நிலையில், அவர்களுக்கு புதிய வாழ்விடமாகவும் நம்பிக்கையின் தளமாகவும் மாறியுள்ளது பீடோரில் செயல்பட்டு வரும் HK அன்பு இல்லம்.
தெலுக் இந்தான் ஜாலான் பீடோர் கம்போங் 12ஆவது மைல் பகுதியில் வசித்து வந்த இராமைய்யா அப்பளசாமி (67 வயது), அவரது மனைவி சரஸ்வதி கண்ணியப்பன் (61 வயது), வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைபாடுகளால் நாளுக்கு நாள் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டனர். குறிப்பாக நடக்க முடியாத நிலையில் இருக்கும் இராமைய்யாவின் பராமரிப்பு குடும்பத்திற்கு பெரும் சவாலாக மாறியிருந்தது.
வாழ்நாள் முழுவதும் உழைத்து சேமித்து வைத்திருந்த ஊழியர் சேமநிதி மற்றும் பிற சேமிப்புப் பணங்களையும் சிலர் ஏமாற்றி பெற்றுக்கொண்டதாக சரஸ்வதி கண்ணீருடன் தெரிவித்தார். பொருளாதார பாதுகாப்பை இழந்ததோடு, உறவினர்களின் முழுமையான ஆதரவும் கிடைக்காததால் அவர்கள் எதிர்காலம் குறித்து பெரும் அச்சத்தில் இருந்தனர்.
இதற்கிடையில், உறவினரான மகேஸ்வரியின் இல்லத்தில் தற்காலிகமாக தங்கியிருந்தாலும், தொடர்ந்து அவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பாத தம்பதியர், தங்களது நிலையை விளக்கி HK அன்பு இல்லத்தின் தோற்றுநர் கலைவேந்தன் மூக்கனை அணுகினர்.
அவர்களின் துயரமான சூழ்நிலையை அறிந்த கலைவேந்தன் மூக்கன் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அன்பு இல்ல நிர்வாகத்தினரை அனுப்பி முதிய தம்பதியரை பாதுகாப்பாக அழைத்து வர ஏற்பாடு செய்தார். தற்போது அவர்கள் அன்பு இல்லத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்களுக்கு சத்தான உணவு, வசதியான தங்குமிடம், மருத்துவ பராமரிப்பு உள்ளிட்ட தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக இராமைய்யாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, ஊழியர்கள் தனிப்பட்ட கவனிப்பையும் அளித்து வருகின்றனர்.
முதியவர்கள் நமது சமூகத்தின் பொக்கிஷங்கள். அவர்களை கைவிடாமல் பாதுகாப்பதும், அன்புடன் அரவணைப்பதும் ஒவ்வொருவரின் கடமையாகும். அன்பு இல்லத்தில் தங்கியிருப்பவர்கள் அனைவரும் எங்கள் குடும்ப உறுப்பினர்களே, என கலைவேந்தன் மூக்கன் தெரிவித்தார்.
முன்னதாக எதிர்காலமே கேள்விக்குறியாக இருந்த இந்த முதிய தம்பதியருக்கு, இன்று பாதுகாப்பான வாழ்க்கையும் மனிதநேய அரவணைப்பும் கிடைத்துள்ளது. அன்பும் அக்கறையும் இருந்தால், ஒரு மனிதரின் வாழ்க்கையை முழுமையாக மாற்ற முடியும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
மேலும், இந்த தம்பதியருக்கு உதவ விரும்பும் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் HK அன்பு இல்லத்தை தொடர்புகொண்டு தங்களது பங்களிப்பை வழங்கலாம் என்றும் கலைவேந்தன் மூக்கன் கேட்டுக்கொண்டார்.

