


சிரம்பான், ஜூலை 7-
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் லாபு 4 தோட்டத் தமிழ்ப்பள்ளி கட்டுமான பணிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள் 20 லட்சம் வெள்ளி மானியம் வழங்கி பேருதவி புரிந்துள்ளார்.
மடானி அரசாங்கம் சார்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த மிகப்பெரிய மானியத்தை வழங்கி இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.
லாபு 4 தமிழ்ப்பள்ளிக்காக நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கம் வழங்கிய 6 ஏக்கர் புதிய நிலத்தில் புதிய பள்ளிக் கட்டடம் அமைப்பதற்குத் தேவையான ரிங்கிட் மலேசியா 9 மில்லியன் நிதி, பத்து நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிதி திரட்டும் விழாவில் வெற்றிகரமாக திரட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த நிகழ்வில், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அவர்கள், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களின் சார்பில் ரிங்கிட் மலேசியா 2 மில்லியன் நிதி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இப்போது, அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அவர்கள் பள்ளிக்கு நேரில் வருகை தந்து, பிரதமரின் சார்பாக ரிங்கிட் மலேசியா 2 மில்லியன் தொகை பள்ளியின் LPS வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ ஆவணத்தையும் பள்ளி நிர்வாகத்திடம் வழங்கினார்.
இந்த நிதி உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், புதிய பள்ளிக் கட்டடம் அமைக்கும் அடுத்தகட்ட பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.

