120 ஆண்டுகால ஒற்றுமையின் அடையாளமாக ஜெண்டராட்டா தோட்ட ஸ்ரீ மகா விஷ்ணு ஆலய கும்பாபிஷேகம்

தெலுக் இந்தான், ஜூலை 7 –

பேராக் மாநிலம் தெலுக் இந்தானிலுள்ள ஜெண்டராட்டா தோட்டம், பிரிவு 2-இல் அமைந்துள்ள ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தின் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், பக்தி, பாரம்பரியம், சமூக ஒற்றுமையை ஒருங்கிணைத்த ஆன்மிக விழாவாக சென்ற ஞாயிற்றுக்கிழமையன்று சிறப்பாக நடைபெற்றது.

பல பகுதிகளைச் சேர்ந்த 3,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலையென திரண்ட நிலையில், யுனைடெட் பிளாண்டேசன் பெர்ஹாட்டின் தலைமை நிர்வாக இயக்குநர் டத்தோ கால் பெக் நெல்சன் மற்றும் நிர்வாக இயக்குநர் மார்டின் பெக் நெல்சன் ஆகியோர் தலைமையில் இந்த மகா கும்பாபிஷேக விழா, காலை 10.00 மணி முதல் 10.37 மணி வரை மிக கோலாகலமாக நடந்தேறியது.

தேவாலய சேவாமணி சிவஸ்ரீ
கா. கணேசன் குருக்கள் தலைமையில் மலேசியா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 சிவாச்சாரியார்கள் ஆகம முறையின்படி அனைத்து பூஜைகளையும், யாக சடங்குகளையும் முறையாக நடத்தினர்.

யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித கலசநீர் சிவாச்சாரியார்களால்
ஆலய கோபுரத்தில் ஊற்றப்பட்ட தருணத்தில், “கோவிந்தா”, “நாராயணா”, “ஓம் நமோ நாராயணாய” என்ற பக்தர்களின் முழக்கங்கள் விண்ணை முட்ட, ஆலய வளாகம் முழுவதும் ஆன்மிக உணர்வு பெருக்கெடுத்தது.

மாபெரும் இந்த விழாவில் டத்தோ கால் பெக் நெல்சன் மற்றும் மார்டின் பெக் நெல்சன் ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் பாரம்பரிய இந்து உடையில் பங்கேற்றது, மத நல்லிணக்கத்திற்கும் கலாசார மரியாதைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.

மேலும் முன்னதாக இந்த ஆலயப் புதுப்பிப்பு மற்றும் கும்பாபிஷேகத் திருப்பணிகளுக்காக 1.5 லட்சம் ரிங்கிட் நிதியுதவி வழங்கிய டத்தோ கால் பெக் நெல்சனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆலயத் தலைவரும், ஜெண்டராட்டா தோட்டம் பிரிவு 2 துணை மேலாளருமான ஜெயக்குமார் மணியம் ஆலய நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

யுனைடெட் பிளாண்டேசன் நிறுவனம் 120 ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்து இன, மத மக்களுக்கும் சமமான மரியாதை அளித்து, சமூக நலன், ஆன்மிக வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்களித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், மகா கும்பாபிஷேக விழா வெற்றிகரமாக நடைபெற முழு ஒத்துழைப்பு வழங்கிய ஆலய துணைத் தலைவர் டத்தோ
இரா. சுப்ரமணியம், செயலாளர்
ச. புண்ணியமூர்த்தி, பொருளாளர் இரா. கணேசன், துணைப் பொருளாளர் சு. மாணிக்கம் உள்ளிட்ட நிர்வாகக் குழுவினருக்கும் அவர் தம் நன்றியைத் தெரிவித்தார்.

ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் வசந்தி சின்னசாமி இந்த மகா கும்பாபிஷேக பெருவிழவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

ஜெண்டராட்டா தோட்டத்தில் பிறந்து வளர்ந்து தற்போது பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் முன்னாள் தோட்டவாசிகளும் குடும்பத்தினருடன் பெருமளவில் பங்கேற்று, நீண்ட காலத்திற்குப் பிறகு தங்கள் சொந்த ஆலயத்தில் ஒன்றுகூடியது மறக்க முடியாத அனுபவமாக அமைந்ததாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles