சென்னையில் நடைபெற்ற புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாட்டில் 30 நாள்கள் தமிழ் பயிற்சிப் பட்டறை

சென்னை, ஜூலை 11

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் உலகத் தமிழ்க் கல்விக் கழகம் இணைந்து நடத்திய 4வது புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு, ஜூலை 2 முதல் 5 வரை சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த மாநாட்டில் மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, மொரீசியஸ், ஆஸ்திரேலியா, இலங்கை, ஹாங்காங், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ்க் கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் மொழி ஆர்வலர்கள் பங்கேற்றனர். மலேசியாவிலிருந்து 40 பேர் கொண்ட பிரதிநிதிக் குழுவும் இதில் கலந்து கொண்டது.

மாநாட்டின் முக்கிய அம்சமாக, ’30 நாள்களில் தமிழ்’ என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்பு பயிற்சிப் பட்டறையை முனைவர் கஸ்தூரி இராமலிங்கம் மற்றும் திரு. சதீஷ் ராவ் இணைந்து நடத்தினர். அப்போது 30daystamil.com என்ற தமிழ் கற்றல் இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தப் பட்டறையில் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடன் பேச்சுப் பயிற்சி, கதை சொல்லல், விளையாட்டு அடிப்படையிலான கற்றல் உள்ளிட்ட புதுமையான முறைகள் மூலம் தமிழைக் கற்பிக்கும் அணுகுமுறைகள் விளக்கப்பட்டன.

பங்கேற்ற ஆசிரியர்கள் ஆர்வத்துடன் செய்முறை (Hands-on) பயிற்சிகளில் ஈடுபட்டு, இணையதளத்தை நேரடியாகப் பயன்படுத்திப் பார்த்ததுடன், அதை தங்களது வகுப்பறை கற்பித்தலில் எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதையும் அறிந்து கொண்டனர்.

மேலும், செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தி மாணவர்களின் கேட்டல், பேச்சு, வாசிப்பு மற்றும் எழுத்துத் திறன்களை மேம்படுத்துவதற்கான கற்றல் வளங்கள் மற்றும் பயிற்சி முறைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.

புதுமையான தொழில்நுட்பம், நடைமுறைப் பயிற்சி மற்றும் மாணவர் மையக் கற்றல் அணுகுமுறைகளை ஒருங்கிணைத்த இந்தப் பட்டறை, பங்கேற்ற ஆசிரியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ்க் கற்றலை மேலும் எளிமையாகவும், சுவாரஸ்யமாகவும், பயனுள்ளதாகவும் மாற்றும் இந்த முயற்சியை அவர்கள் பாராட்டினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles