
கோலாலம்பூர், ஜூலை 17 –
கோத்தா டாமன்சாரா குடியிருப்பு பகுதியில் முன்மொழியப்பட்டுள்ள தரவு மைய கட்டுமானத் திட்டம் குறித்து எழுந்துள்ள மக்கள் கவலைகளைத் தொடர்ந்து, இவ்விவகாரத்தை அமைச்சரவைக் கூட்டத்தில் கொண்டு செல்லவிருப்பதாக சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மனிதவள அமைச்சருமான அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், குறிப்பாக குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் தரவு மையங்களை அமைப்பது தொடர்பாக மிகவும் விரிவான மற்றும் தெளிவான வழிகாட்டுதல்களையும், முறையான நிர்வாகக் கட்டமைப்புகளையும் உருவாக்குவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்று குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் முதலீடுகளுக்கோ அல்லது திட்டங்களுக்கோ தாம் எதிரானவர் அல்ல என்று தெளிவுபடுத்திய அவர், அதே சமயம் எந்தவொரு பெரிய அளவிலான கட்டுமானத் திட்டமும் உண்மையான தரவுகள், முறையான ஆய்வுகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நடத்தப்படும் அர்த்தமுள்ள கலந்துரையாடல்களின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இத்தகைய திட்டங்கள் மிகவும் வெளிப்படையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டும் என்பது அவரது நிலைப்பாடாகும்.
தமது சுங்கை பூலோ நாடாளுமன்ற சேவை மையத்திற்கு, இந்தத் திட்டம் குறித்த எந்தவொரு முன்னறிவிப்போ அல்லது கலந்துரையாடல் அழைப்போ வரவில்லை என்று டத்தோஶ்ரீ ரமணன் சுட்டிக்காட்டினார்.
உள்ளூர் மக்களின் புகார்களைத் தொடர்ந்து, தங்களது சேவை மையம் அந்தத் திட்டத்தை ஆய்வு செய்ததில், இடத்தின் பொருத்தம், சமூக நலன், சுற்றுப்புறச் சூழல் மற்றும் மக்களின் வாழ்க்கைத்தரம் போன்ற பல முக்கிய அம்சங்களில் போதிய கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம் என்பது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 15-ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா மாநகர மன்ற மேயருக்கு இது குறித்து அதிகாரப்பூர்வமான எதிர்ப்பு கடிதத்தை தாம் சமர்ப்பித்ததாகவும், இருப்பினும் இதுவரை அதற்கான எந்தவொரு பதிலும் வரவில்லை என்றும் அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.
கோத்தா டாமன்சாரா குடியிருப்பாளர்களின் இந்த நியாயமான கவலைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரையிலும், மக்களின் நலனை மையமாகக் கொண்டு இந்த விவகாரத்தை தொடர்ந்து கண்காணிப்பேன் என்று டத்தோஸ்ரீ ரமணன் உறுதியளித்தார்.
உள்ளூர் மக்களின் குரல் சம்பந்தப்பட்ட உயர் மட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுவதையும், நியாயமான மற்றும் வெளிப்படையான தீர்வு எட்டப்படுவதையும் உறுதி செய்வேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

