

நீலாய், ஜூலை 31- தூய்மையான நிர்வாகச் சாதனைகள், பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் நலனை முன்னிறுத்தி ஹராப்பான் மக்களின் ஆதரவை நாடிக் கொண்டிருக்கையில், எதிரணியோ வாக்குகளைப் பெற இனவாத உணர்வுகளைத் தூண்டும் அரசியலைத் தேர்ந்தெடுத்துள்ளது.
அவர்கள் சீனர்களுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டுவதோடு, ஹராப்பான் என்பது DAP-இன் கருவி என்றும் குற்றம் சாட்டுகின்றனர் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டார்.
கடந்த காலத்தை நாம் பார்த்தால், தோல்வியுற்ற நிர்வாகம் என்பது எந்த இனத்தையோ அல்லது தோல் நிறத்தையோ சார்ந்ததல்ல என்பது தெளிவாகிறது.
முழுமையாக மலாய் தலைவர்கள் நிர்வகித்த அரசாங்கங்களிலும், அரசு நிறுவனங்களிலும் கூட தவறான நிர்வாகம், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் செல்வந்தர்களாக்கிக் கொள்ளும் செயல்களால் பில்லியன் கணக்கான ரிங்கிட் இழப்புகளும் கடன்களும் ஏற்பட்டுள்ளன.
எனவே, உண்மையான கேள்வி இனம் அல்லது தோல் நிறம் அல்ல. மக்களுக்கான பொறுப்பை நேர்மையுடனும், நாணயத்துடனும், திறமையுடனும், அர்ப்பணிப்புடனும் ஏற்றுச் செயல்படக்கூடியவர்களே முக்கியம்.
அதுவே ஒரு அரசைத் தேர்ந்தெடுக்கும் போது மக்களின் அடிப்படை அளவுகோலாக இருக்க வேண்டும்.
நாளை சனிகழமை நடைபெறும் வாக்குப்பதிவில், நெகிரி செம்பிலான் மக்களிடம் நான் பணிவுடன் வேண்டுகோள் விடுக்கிறேன்.
இனவாத உணர்வுகளின் அடிப்படையில் அல்லாமல், செயல்திறன் மற்றும் சாதனைகளின் அடிப்படையில் உங்கள் முடிவை எடுங்கள். மக்களுக்காக உண்மையாக உழைத்தது யார், நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டது யார், அனைவருக்கும் பயனளிக்கும் வளர்ச்சியை உருவாக்கியது யார் என்பதை மதிப்பீடு செய்து வாக்களியுங்கள்.
நெகிரி செம்பிலான் மக்கள் சரியான முடிவை எடுக்கும் அறிவும் முதிர்ச்சியும் கொண்டவர்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.
டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூன் தலைமையிலான ஹராப்பான் அரசுக்கு மீண்டும் வலுவான ஆணையை வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்.
அவரது தலைமையில் நெகிரி செம்பிலான் நீதியுடனும், அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையுடனும் முன்னேறியுள்ளது. பல தசாப்தங்களாக நிலுவையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதுடன், அனைத்து இன மக்களுக்கும் சமமான நன்மையும் வளமும் அளிக்கும் பல கொள்கைகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் சொன்னார்.

