பார்வையை இழந்த 65 வயது முதியவருக்கு மீண்டும் பார்வை தந்த மனிதநேயம்! டத்தோஸ்ரீ ஜெயேந்திரனுக்கு குவியும் பாராட்டுகள்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 10 –

நான்கு ஆண்டுகளாக இரு கண்களிலும் ஏற்பட்ட கடுமையான கண்புரை காரணமாக பார்வையிழந்து, பிறரின் உதவியை நாடி வந்த 65 வயது முகமட் டின் டெலிக்கு, மனிதநேயமிக்க தொழிலதிபர் டத்தோஸ்ரீ ஜெயேந்திரன் ராமசாமி  கண்புரை அறுவைச் சிகிச்சைக்கான செலவை ஏற்றுக்கொண்டு மீண்டும் பார்வையைப் பெற்றுத் தந்ததுடன், வேலைவாய்ப்பையும் வழங்கியுள்ளார்.

மலேசியா தனது 69ஆவது தேசிய தினத்தைக் கொண்டாடத் தயாராகி வரும் நிலையில், முகமட் டின்னுக்கு இந்த ஆண்டு கிடைத்துள்ள சுதந்திரம் மிகவும் தனித்துவமானது. மீண்டும் உலகைப் பார்க்கவும், சுயமாக நடமாடவும், கண்ணியத்துடன் வாழ்க்கையைத் தொடரவும் கிடைத்த வாய்ப்பே அவருக்கு உண்மையான ‘மெர்டேகா’வாக அமைந்துள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இரு கண்களிலும் கண்புரை தீவிரமடைந்ததால் பார்வையை இழந்த முகமட் டின், தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக பணியாற்றிய வேலையையும் கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

“என்னால் எங்கு செல்கிறேன் என்பதைக் கூட பார்க்க முடியாத நிலையில், இந்த கைத்தடி தான் எனது கண்களாக இருந்தது,” என்று அவர் கண்ணீருடன் தெரிவித்தார்.

வாழ்வாதாரத்துக்கு வேறு வழியின்றி, விவாகரத்து பெற்றவரான முகமட் டின், தனது இரு பிள்ளைகளுடனும் தொடர்பை இழந்த நிலையில், புடுராயா (தற்போது புடு சென்ட்ரல்) அருகிலுள்ள குறைந்த கட்டண விடுதியில் தினமும் RM30 செலுத்தி சிறிய அறை ஒன்றை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தார்.

தினமும் அதிகாலை 5.30 மணிக்கே வெளியே சென்று மாலை வரை கோலாலம்பூர் சாலைகளில் பொதுமக்களின் உதவியை நாடி வந்தார்.

“சிலர் உணவு கொடுத்தனர். சிலர் சிறிய தொகையை வழங்கினர். சில நாட்களில் ஒரு சென் கூட கிடைக்காமல் போயிருக்கிறது,” என்று அவர் கூறினார்.

இந்நிலையில், கோர்ட்டுமலை பிள்ளையார் கோயில் அருகே அவர் வழக்கமாக அமர்ந்திருப்பதை அடிக்கடி கடந்து சென்ற டத்தோஸ்ரீ ஜெயேந்திரன், அவரது நிலைமையை கவனித்தார்.

அவர் முகமட் டினை சாலையைக் கடக்க உதவியதுடன், சில நேரங்களில் அவரது அன்றாட தேவைகளுக்காக பணமும் வழங்கி வந்தார்.

“என்னால் அவரது முகத்தைப் பார்க்க முடியவில்லை. அவரது குரலை வைத்துதான் அவரை அடையாளம் கண்டுகொள்வேன். பின்னர்தான் அவர் ஒரு கப்பல் நிறுவனத்தின் உரிமையாளர் என்பதை அறிந்தேன். அவரது உதவி எனக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது,” என்றார் முகமட் டின்.

முன்னதாக கண் பரிசோதனை செய்துகொண்ட முகமட் டின், மீண்டும் பார்வை பெற முடியுமா என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால், கண்புரை அறுவைச் சிகிச்சைக்கு RM1,800 செலவாகும் என தெரிவிக்கப்பட்டபோது, அந்தத் தொகையை செலுத்த முடியாமல் நம்பிக்கையிழந்தார்.

தனது நிலைமையை ஜெயேந்திரனிடம் தெரிவித்தபோது, அவர் உடனடியாக முகமட் டினுக்கு மேலதிக மருத்துவப் பரிசோதனைகளை ஏற்பாடு செய்ததுடன், கண்புரை அறுவைச் சிகிச்சைக்கான செலவையும் ஏற்றுக்கொண்டார்.

“ஆகஸ்ட் 4ஆம் தேதி அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த பின்னர், முதல் முறையாகக் கண்களைத் திறந்தேன். இனி ஒருபோதும் பார்க்க முடியாது என்று நினைத்த உலகத்தை மீண்டும் பார்க்க முடிந்தது,” என்று முகமட் டின் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

கோலாலம்பூரில் உள்ள மஞ்சித் சிங் கண் சிறப்பு சிகிச்சை மையத்தின் ஆலோசனை கண் மருத்துவர் டாக்டர் மஞ்சித் சிங், முகமட் டினின் பார்வை மிகவும் மோசமடைந்திருந்ததாகவும், இரு கண்களிலும் மேற்கொள்ளப்பட்ட கண்புரை அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் அவரது பார்வை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையே, அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் முகமட் டினுக்கு தனது நிறுவனத்தில் பாதுகாவலர் வேலை வழங்கியுள்ளார் ஜெயேந்திரன்.

இதன் மூலம் மீண்டும் வேலைக்குச் சென்று தனது வாழ்க்கையைப் புதிதாக கட்டியெழுப்பும் வாய்ப்பும் முகமட் டினுக்கு கிடைத்துள்ளது.

“அந்த வேலைவாய்ப்பைப் பெற்றபோது அதிர்ச்சியும் அளவில்லாத மகிழ்ச்சியும் ஏற்பட்டது. நான் என்றென்றும் இழந்துவிட்டதாக நினைத்திருந்த பார்வையை அவர் எனக்குத் திருப்பிக் கொடுத்தார். இப்போது எனது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வாய்ப்பையும் வழங்கியுள்ளார்.

“எனது வாழ்க்கையின் இருண்ட காலத்தில் அவர் காட்டிய கருணையையும் உண்மையான உதவியையும் நான் என்றும் மறக்கமாட்டேன்,” என்றார் முகமட் டின்.

இந்த ஆண்டு தேசிய தினக் கொண்டாட்டத்தின்போது வானவேடிக்கையைத் தனது சொந்தக் கண்களால் பார்க்க முடியும் என்பதே தனக்கு கிடைத்த மிகப்பெரிய மகிழ்ச்சி என்றும் அவர் கூறினார்.

“இந்த ஆண்டு தேசிய தின வானவேடிக்கையை என் கண்களால் பார்க்க முடியும். அதை நேரில் பார்ப்பதே எனக்கான உண்மையான ‘மெர்டேகா’,” என்று அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

முகமட் டினின் நிலைமையைக் கண்டு மனம் உருகியதாகத் தெரிவித்த ஜெயேந்திரன், அவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகக் கூறினார்.

வெள்ளிக்கிழமை தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லும்போது கூட பிறர் கையைப் பிடித்துக் கொண்டு செல்ல வேண்டிய நிலையில் முகமட் டின் இருந்தது தன்னை மிகவும் வருத்தமடையச் செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

“இன்று அவர் யாருடைய உதவியும் இல்லாமல் தனியாக பள்ளிவாசலுக்குச் சென்று தொழுகை நடத்த முடிகிறது,” என்றும் டத்தோஸ்ரீ  ஜெயேந்திரன் கூறினார்.

மனிதநேயத்துடன் அவர் செய்த இந்த உதவிக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles