பிபிபி தலைவராக மேக்லின் டி’க்ரூஸ் அங்கீகாரத்தை எதிர்ப்பதில் டான்ஸ்ரீ கேவியஸ் தோல்வியுற்றார்

*புத்ராஜெயா: ஆகஸ்ட் 17- முன்னாள் மக்கள் முற்போக்கு கட்சியின் (பிபிபி) தலைவர் டான்ஸ்ரீ எம். கேவியஸ், மறைந்த மேக்லின் டென்னிஸ் டி’குரூஸ் கட்சியின் முன்னாள் தலைவராக அங்கீகரிக்கப்பட்டதை எதிர்த்து நீதித்துறை மறுஆய்வு நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான அனுமதியைப் பெறும் முயற்சியில் தோல்வியடைந்தார்.

மூன்று நீதிபதிகள் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு ஒருமனதாக அவரது மேல்முறையீட்டை நிராகரித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

கடந்த 20 நவம்பர் 2023 அன்று, நீதித்துறை மறுஆய்வு நடவடிக்கைகளைத் தொடங்க டான்ஸ்ரீ கேவியஸ்ஸுக்கு அனுமதி மறுத்த உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அவர் மேல்முறையீடு செய்திருந்தார்.

கேவியஸ்யின் பிரதான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபபடுவதற்கு அனுமதி வழங்குவதற்கு சட்டத்துறைத் தலைவர் தரப்பு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், டி’குரூஸிடமிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட டத்தோ டாக்டர் லோகா பாலா மோகன், கட்சியின் பொது அதிகாரி என்ற முறையில் கேவியஸ்யின் மேல்முறையீட்டில் தலையிடுவதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

நீதித்துறை மறுஆய்வுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமெனில், விண்ணப்பதாரரின் வழக்கு தேவையான ஆரம்ப நிலையை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்பதுடன், அது அற்பமான அல்லது ஆதாரமற்ற வழக்காக இருக்கக்கூடாது.

இந்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் லிம் சோங் ஃபோங், லிம் ஹொக் லெங் மற்றும் அஹ்மாட் ஷஹ்ரிர் சாலே ஆகியோர், டத்தோ லோகா பாலா மோகனுக்கும் சட்டத்துறைத் தலைவருக்கும் தலா RM30,000 வழக்குச் செலவாக டான்ஸ்ரீ கேவியஸ் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

நீதிபதி லிம் ஹொக் லெங், ஹொக் லெங், நீதிமன்றத்தின் விரிவான காரணங்களை வாசித்தபோது, இந்த விவகாரம் ஒரு அரசியல் கட்சியின் உள்நிர்வாகம் தொடர்பானது என்றும், எனவே சங்கங்கள் சட்டம் 1966இன் பிரிவு 18C இன் கீழ் நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்படுத்த முடியாது என்றும் தெரிவித்தார்.

2023 ஏப்ரல் 11ஆம் தேதியிட்ட கடிதத்தின் மூலம் உள்துறை அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்த முடிவை ரத்து செய்யுமாறு கேவியஸ் கோரியிருந்தார்.

அந்தக் கடிதத்தில் மறைந்த மேக்லின் டென்னிஸ் டி’குரூஸ் பிபிபி தலைவராக முறையாக அங்கீகரிக்கப்பட்டதுடன், கட்சி தொடர்பான மேல்முறையீடும் அங்கீகரிக்கப்பட்டிருந்தது.

இதற்கு முன்னதாக பிபிபி-யின் பதிவு சங்கங்களின் பதிவாளர் (RoS) மூலம் ரத்து செய்யப்பட்டிருந்தது.

கேவியஸ்சின் முக்கிய வாதங்களில் ஒன்று, அந்தக் கடிதத்தில் உள்துறை அமைச்சர் நேரடியாக கையெழுத்திடாமல், அமைச்சின் அதிகாரி ஒருவர் கையெழுத்திட்டிருந்தார் என்பதாகும்.

எனினும், அந்தக் கடிதத்தை முழுமையாகப் படிக்கும்போது, அதில் குறிப்பிடப்பட்டுள்ள முடிவு உள்துறை அமைச்சரால் எடுக்கப்பட்டது என்பது தெளிவாக இருப்பதாக நீதிபதி ஹொக் லெங் தெரிவித்தார்.

கேவியஸ்சின் கட்சி உறுப்பினர் நிலை தொடர்பான வாதத்தையும் நீதிமன்றம் நிராகரித்தது.

கேவியஸ் இதுவரை விடுவிக்கப்படாத திவாலானவர் என்பதால், சங்கங்கள் சட்டத்தின் பிரிவு 9A-ன் கீழ் அவர் எந்தப் பதவியையும் வகிக்க முடியாது என நீதிபதி ஹொக் லெங் தெரிவித்தார்.

மேலும், 2018ஆம் ஆண்டு கட்சியின் உச்ச மன்றம் ஒருமனதாக எடுத்த முடிவைத் தொடர்ந்து கேவியஸ் பிபிபி உறுப்பினர் பதவியிலிருந்து விலகியவர் என்ற வாதத்தையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

பிபிபி-யின் கட்சி அரசியலமைப்புச் சட்டத்தின் 30.4ஆம் பிரிவையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். அதன் கீழ், கட்சி தொடர்பான எந்தவொரு விவகாரத்தையும் நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லும் உறுப்பினர் தானாகவே கட்சி உறுப்பினர் பதவியை இழப்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கேவியஸ் தனது நடவடிக்கை பொதுநலன் மற்றும் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்டது எனக் கூறியிருந்தபோதிலும், அவர் கோரிய நிவாரணங்கள், அதில் பிரகடனங்களும் அடங்கும், தனிப்பட்ட தன்மை கொண்டவை என நீதிபதி ஹொக் லெங் தெரிவித்தார்.

“உறுப்பினர் அல்லாதவராகவும், இன்னும் விடுவிக்கப்படாத திவாலானவராகவும் இருக்கும் மேல்முறையீட்டாளருக்கு எந்தவொரு பதவியையும் வகிக்கும் உரிமை இல்லை,” என அவர் தெரிவித்தார்.

சங்கங்கள் சட்டத்தின் கீழ் mandamus எனப்படும் கட்டாய உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்ற வாதத்தையும் நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.

கேவியஸ் சார்பில் வழக்கறிஞர்கள் எம். மனோகரன் மற்றும் கணேந்திர மனோகரன் ஆஜராகினர். சட்டத்துறைத் தலைவர் சார்பில் மூத்த மத்திய அரசின் சட்ட ஆலோசகர் நூர்ஹஃபிஸ்ஸா அஸிஸான் மற்றும் மத்திய அரசின் சட்ட ஆலோசகர் முஹைரி நோஹ் ஆஜராகினர்.

டத்தோ லோகா பாலா மோகன் சார்பில் கவின் ஜெயபால் மற்றும் பர்வீனா கவுர் ஆகியோர் ஆஜராகினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles