சுக்மா கபடி போட்டியில் சிலாங்கூருக்கு வெள்ளிப் பதக்கம்! கெர்லிங் மைகீத்தா சூரியன் இளம் வீரர்களின் பங்களிப்பு

கெர்லிங், ஆக. 20 –
2026ஆம் ஆண்டு சுக்மா XXII கபடி போட்டியில் சிலாங்கூர் அணி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள நிலையில், அந்த வெற்றிப் பயணத்தில் கெர்லிங் மைகீத்தா சூரியன் ஆசிரமம் மற்றும் சோழன் கபடி கழகத்தைச் சேர்ந்த இரு இளம் வீரர்களின் பங்களிப்பு கவனத்தை ஈர்த்துள்ளது.

18 வயதுடைய நவனிஷ்வரன் தேவேந்திரன் மற்றும் சேரன்குமார் முனியாண்டி ஆகியோர் சிலாங்கூர் அணிக்காக களமிறங்கி, போட்டியின் பல்வேறு கட்டங்களில் தங்களது வேகம், ஆட்ட நுணுக்கம் மற்றும் அணியுடன் இணைந்து செயல்படும் திறனை வெளிப்படுத்தினர்.

கபடி மீது சிறுவயது முதலே ஆர்வம் கொண்டிருந்த இருவரும், தொடர்ச்சியான பயிற்சி மற்றும் கடின உழைப்பின் மூலம் தங்களது ஆட்டத்திறனை வளர்த்துக் கொண்டனர்.

அதன் பலனாக, மாநில அளவிலான அணியில் இடம்பிடித்து சுக்மா போன்ற உயர்மட்ட போட்டியில் களமிறங்கியிருப்பது அவர்களது விளையாட்டு வாழ்க்கையில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

இரு வீரர்களின் வளர்ச்சிக்கு மைகீத்தா சூரியன் ஆசிரமத்தில் வழங்கப்பட்ட பயிற்சியும் விளையாட்டு ஒழுக்கமும் முக்கிய அடித்தளமாக அமைந்ததாக ஆசிரமத்தின் தோற்றுநர் கனகராஜா அழகேசன் தெரிவித்தார்.

மைகீத்தாவில் அவர்கள் கற்றுக்கொண்ட பயிற்சி மற்றும் ஒழுக்கத்தை சுக்மா போட்டிக் களத்தில் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக அழுத்தமான சூழ்நிலைகளிலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்ட விதம், அவர்களின் வளர்ச்சியை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது,” என அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, இளம் வீரர்களின் திறமையை வளர்ப்பதில் தொடர்ந்து வழிகாட்டுதலும் பயிற்சியும் வழங்கிய சிலாங்கூர் அணியின் பயிற்சியாளர்களான அகிலன், தியாகு மற்றும் கேப்ரியல் ஜான்சன் ஆகியோருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

சுக்மா போட்டியில் பெற்றுள்ள அனுபவம், நவனிஷ்வரன் மற்றும் சேரன்குமாரின் எதிர்கால கபடி பயணத்திற்கு மேலும் வலுசேர்க்கும் என்றும், தேசிய அளவிலான போட்டிகளில் அவர்கள் முன்னேறுவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் கனகராஜா அழகேசன் நம்பிக்கை தெரிவித்தார்.

சிலாங்கூர் அணியின் வெள்ளிப் பதக்கம் ஒட்டுமொத்த அணியின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாக இருந்தாலும், அந்த வெற்றியில் கெர்லிங் இளம் வீரர்களான நவனிஷ்வரன் மற்றும் சேரன்குமாரின் பங்களிப்பும் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது.

இவர்களின் சாதனை, மைகீத்தா சூரியன் ஆசிரமம் மற்றும் சோழன் கபடி கழகத்திற்கு பெருமை சேர்ப்பதுடன், கெர்லிங் பகுதியைச் சேர்ந்த இளம் தலைமுறையினரும் கபடி போன்ற பாரம்பரிய விளையாட்டுகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு உயரங்களைத் தொட முடியும் என்பதற்கான ஊக்கமாகவும் அமைந்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles