எல்லா காலத்திலும் கொண்டாடப்பட வேண்டியவர் கவிஞர் கோமு – சிவாலெனின்!!

சித்தியவான்,ஆக19: கவிஞர் கோமு எல்லா காலத்திலும் கொண்டாடப்பட வேண்டிய மலேசிய எழுத்துலகின் மாபெரும் ஆளுமை.

அவரது எழுத்துகள் காலத்தை வென்று இம்மண்ணில் வாழும்.கண்ணதாசனுக்கு நூற்றாண்டு விழா எடுப்பது போல் ஒருநாள் இம்மண்ணில் கவிஞர் கோமு எனப்படும் கோ.முனியாண்டிக்கு நூற்றாண்டு விழா எடுக்கப்படுவதற்கான சாத்தியம் நிச்சயம் உண்டு.

பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 2வது கோமு புதுக்கவிதைப் போட்டியின் பரிசளிப்பு விழாவில் அச்சங்கத்தின் தலைவர் சிவாலெனின் இவ்வாறு குறிப்பிட்டார்.

அச்சங்கத்தின் புரவலர் வழக்கறிஞர் தமிழ்த்திரு ம.மதியழகனின் ஆதரவோடு நடைபெற்று வரும் கோமு புதுக்கவிதைப் போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்சி இவ்வாண்டு கோமுவின் எழுத்துகள் உலா வந்து கொண்டிருக்கும் அவரது சொந்த ஊரான சித்தியவானில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மேலும் உரையாற்றிய சிவாலெனின் படைப்பாளர்களை வாழும் போதே கொண்டாடி விடுங்கள்.சக படைப்பாளனின் எழுத்தை ஆராதனைச் செய்யுங்கள்.நம் உடன் வாழும் ஒவ்வொரு படைப்பாளியையும் கொண்டாட வேண்டியது எழுத்தாளர் இயக்கங்கள்,சக எழுத்தாளர்களின் கடமையென்றும் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய தமிழ்த்திரு மதியழகன் கோமு புதுக்கவிதைப் போட்டி தேசிய அளவில் நடத்தப்பட்டு வந்தாலும் தேசிய அளவில் அனைவரும் அக்கவிஞனை நினைவுக்கூர்ந்து மாபெரும் விழா எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

மேலும்,பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திடும் கோமு புதுக்கவிதைப் போட்டிக்கு தனது ஆதரவும் பங்களிப்பும் எல்லா காலத்திலும் நிறைவாகவே இருக்கும் என்றும் உறுதி அளித்தார்.

முன்னதாக தமிழ் வாழ்த்துடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் செயலாளரின் வரவேற்புரையும் துணைத்தலைவரின் நோக்கவுரையும் இடம் பெற்ற வேளையில் கோமுவுடன் நெருங்கிய நட்பில் இருந்த சமகால எழுத்தாளரான கவிஞர் மனஹரன் கோமும் கவிதைகளும் என தனது கருத்துரையை சிறப்பாக வழங்கினார்.

இதற்கிடையில்,கோமுவின் வாழ்வியல்,கவிதை குறித்த தேடலின் காணொளியும் கோமு குறித்த தங்களின் உணர்வுகளை பகிர்ந்து கொண்ட எழுத்தாளர் யோகி,எழுத்தாளர் இளந்தமிழன் மற்றும் மாத்தள சோமு ஆகியோரின் காணொளிகளும் இந்நிகழ்ச்சியில் இடம் பெற்றிருந்தது நனிச் சிறப்பாக அமைந்திருந்தது.

கோமு புதுக்கவிதையின் வெற்றியார்களை அறிவிப்பதற்கு முன்னதாக தலைமை நீதிபதியாக கவிதைகளைத் தேர்வு செய்த படைப்பாளர் பூங்குழலி வீரன் கவிதைகள் குறித்தும்,புதுக்கவிதைக்கான மூலங்கள் குறித்தும் மிக அழகாக எடுத்துரைத்தார்.

இவ்வாண்டு நடைபெற்ற கோமு புதுக்கவிதைப் போட்டியின் முதல் நிலை வெற்றியாளராக நெகிரி செம்பிலானைச் சேர்ந்த கோவி.மணிமாறன் முதல் நிலை வெற்றியாளராகவும் கெடாவைச் சேர்ந்த எழுத்தாளர் காந்தி முருகன் 2ஆம் நிலையிலும் கெடாவின் கவிஞர் க.உதயகுமார் மூன்றாம் நிலையிலும் வெற்றி பெற்றனர்.

மேலும்,நான்காம் நிலையில் கவிஞர் மகேந்திரன் நவமணி,5ஆம் நிலையில் ரெவின்,6ஆம் நிலையில் கவிஞர் அருள் ஆறுமுகம்,7ஆம் நிலையில் கஸ்தூரி இரவிந்திரன்,8ஆம் நிலையில் கலைசெல்வன்,9ஆம் நிலையில் வசந்தி மற்றும் 10ஆம் நிலையில் சுப்பிரமணியம் ஆகியோரும் வெற்றியாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles