
புத்ராஜெயா, ஆகஸ்ட் 19 –
நாட்டின் 69-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களை ஒட்டி, மலேசிய மடானி தத்துவத்தின் கீழ் தொழிலாளர்களின் பாதுகாப்பு, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் சமூக நலன் ஆகியவற்றை மேலும் வலுப்படுத்த மனிதவள அமைச்சு (கெசுமா) தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இன்று மதியம் புத்ராஜெயா, மெனாரா பெர்கேசோவில் நடைபெற்ற ‘ஆகஸ்ட் மாத கெசுமா மாதாந்திர கூட்டம் மற்றும் சுதந்திர தின மாதக் கொண்டாட்டத்தில்’ கலந்துகொண்டு உரையாற்றுகையில் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் மனிதவள மேம்பாட்டுப் பாதையில் அமைச்சு எட்டியுள்ள முன்னேற்றங்கள் குறித்து விரிவாக விளக்கமளித்த அவர், கெசுமாவின் கீழ் செயல்படும் சமூகப் பாதுகாப்பு அமைப்பான பெர்கேசோவின் (PERKESO) ‘மைபியூச்சர்ஜோப்ஸ்’ (MYFutureJobs) தளம், வேலைதேடுபவர்களையும் நிறுவனங்களையும் இணைக்கும் பிரதான உத்திபூர்வ அமைப்பாகச் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

நடப்பு ஆண்டின் ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 14 வரையிலான காலக்கட்டத்தில், நாடு தழுவிய அளவில் 4,393 வேலைவாய்ப்பு முகாம்களும் தொழில் பாதுகாப்புத் திட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் 2,02,951 காலிப் பணியிடங்கள் கண்டறியப்பட்டு, 1,17,733 வேலைதேடுபவர்கள் வெற்றிகரமாகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
அதேவேளையில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த மே தினக் கொண்டாட்டத்தின் போது அறிவித்த 710 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான மதிப்பிலான ‘பேஸ்’ (PACE) பொருளாதார மீள்திறன் திட்டத்தை அமைச்சு தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது.

கெசுமாவின் கீழ் இயங்கும் எச்.ஆர்.டி கார்ப் (HRD Corp), பெர்கேசோ, டேலன்ட்கார்ப் (TalentCorp) மற்றும் பி.டி.பி.கே (PTPK) ஆகிய அமைப்புகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் மூலம் சுமார் 86,000 தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு, திறன் பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும் கிக் தொழிலாளர் மேம்பாடு ஆகியவற்றின் வாயிலாக நேரடியாகப் பயனடைவர்.
சட்ட அமலாக்கப் பிரிவில், தீபகற்ப மலேசிய தொழிலாளர் துறை (JTKSM) 2026-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 10,716 தொழிலாளர் வழக்குகளைக் கையாண்டு 71 சதவீதத் தீர்வை எட்டியுள்ளது.
மேலும், பெறப்பட்ட 4,859 பொதுப் புகார்களில் 92 சதவீதத்திற்குத் தீர்வு காணப்பட்டதோடு, தொழிலாளர் உரிமைகளை உறுதி செய்ய 12,819 சட்டப்பூர்வ ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வெளிநாட்டு ஊழியர்கள் நிர்வாகத்தைச் சீரமைக்கும் நோக்கில், வெளிநாட்டு ஊழியர் மேலாண்மை ஒருங்கினைப்பு மையத்தின் (OSC) நிர்வாகப் பொறுப்பை கெசுமா ஏற்றுக்கொண்டுள்ளது. இது விண்ணப்பச் செயல்பாடுகள் மற்றும் முதலாளிகளுக்கான நேர்காணல் வழிமுறைகளை மேலும் வெளிப்படையாகவும் திறமையாகவும் மாற்ற உதவும்.
கூடுதலாக, சிங்கப்பூருக்கு தினமும் சென்று பணியாற்றும் சுமார் 450,000 மலேசியர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘பெர்கேசோ பயணிகள் திட்டம்’ தயார் நிலையில் உள்ளது. இச்சிறப்புத் திட்டம் வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்விப் பயிற்சி – திவெட் (TVET) துறையை மேம்படுத்தும் வகையில், பி.டி.பி.கே அமைப்பின் 100 மில்லியன் ரிங்கிட் கடனுதவித் திட்டத்தை முழுமையான மானியமாக மாற்றுவதற்கான முன்மொழிவு அமைச்சரவையின் பரிசீலனைக்குச் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்நடவடிக்கை தொழிற்பயிற்சி முடிக்கும் மாணவர்களின் நிதிச்சுமையைக் கணிசமாகக் குறைத்து கல்வி அணுகலை விரிவுபடுத்தும்.
கெசுமாவின் செயல்பாடுகள் மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் நேர்மறையான மாற்றங்களின் மூலமே அளவிடப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், அரசு, முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் இடையிலான முத்தரப்பு உறவை வலுப்படுத்தி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் நிலையான வேலைவாய்ப்பு சூழலை அமைச்சு தொடர்ந்து கட்டமைக்கும் என உறுதிபடத் தெரிவித்தார்.

