
பகாங் மாநிலம், பெந்தோங், புக்கிட் திங்கி பகுதியில் அமைந்துள்ள மலைக்கோவிலில் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்சியையும் வேதனையையும் அளித்துள்ளது என்று மலேசிய தமிழ்ச்சமயப் பேரவையின் துணைத் தலைவர் திரு.அருள்மொழி ஆனந்தத் தமிழன் முனியாண்டி தெரிவித்தார்.
மூன்று இனங்கள் ஒற்றுமையாக வாழும் மலேசிய மண்ணில், ஒவ்வொருவரின் நம்பிக்கையும் அவரவருக்கு உரியது. அந்த நம்பிக்கையை அனைவரும் மதித்து வாழ வேண்டும் என்பதே நமது அடிப்படைக் கோட்பாடு.
ஆனால் அண்மைக் காலமாக கோவில் சிலைகளை உடைப்பதும், வழிபாட்டுத் தலங்களை சேதப்படுத்துவதும் தொடர்கதையாகி வருவது கடும் கண்டனத்திற்குரியது. பிற வழிபாட்டுத் தலங்களையோ, கடவுள் சிலைகளையோ உடைப்பதன் மூலம் யார் என்ன லாபத்தைக் கண்டீர்கள்?
இச்சம்பவம் யாரால் நடத்தப்பட்டது என்று உறுதியாகத் தெரியாவிட்டாலும், எந்தவொரு சமயமும் மதமும் பிற சமயத்தையும் மதத்தையும் இழிவுபடுத்தவோ, சேதப்படுத்தவோ கற்றுத் தரவில்லை. அவ்வாறு செய்பவர்கள் தாம் சார்ந்த சமயத்திற்கே துரோகம் செய்பவர்கள் ஆவர்.
எனவே, இதுபோன்ற சம்பவங்களைக் களைய மலேசிய ஒற்றுமைத் துறை அமைச்சகம் நாட்டு மக்கள் அனைவரும் சமய ஒற்றுமை பேணுவதற்கு ஆக்கபூர்வமான பல நகர்வுகள் செய்ய வேண்டும்.
காவல்படை இச்சம்பவம் குறித்து உடனடி விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து இனி இதுபோன்ற சம்பவங்கள் எங்கும் நடைபெறாமல் இருக்க கடுமையான சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென மலேசிய தமிழ்ச்சமயப் பேரவை சார்பில் திரு.அருள்மொழி ஆனந்தத் தமிழன் முனியாண்டி வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

