
கர்நாடக மாநிலம், சாம்ராச்நகர் மாவட்டம், சாக்கியா வனப்பகுதியில் தொலைந்த மாடுகளைத் தேடிச் சென்ற நான்கு தமிழர்கள் மீது கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தக் கொடூரச் செயலை உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் வன்மையாகக் கண்டிக்கிறதென அதன் ஒருங்கிணைப்பாளர் திரு.பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.
“மான் வேட்டைக்கு வந்தனர்” என்ற கட்டுக்கதையைக் கூறி அப்பாவி தமிழர்களை சுட்டுக் கொல்வது எவ்வகையில் அறமாகும்? இதற்கு யார் அதிகாரம் கொடுத்தது?
இது புதிதல்ல. ஏற்கனவே ஆந்திராவில் கூலித் தொழிலாளிகளாக அழைத்துச் செல்லப்பட்ட 20 தமிழர்களை “செம்மரம் வெட்ட வந்தனர்” என்று கூறி சுட்டுக் கொன்றனர். அதற்கு முன்னர் அதே வனத்துறையினர் ஒரு கூலித் தொழிலாளியை அம்மணமாக்கி, ரோத்தான் குச்சிகளால் ஈவிரக்கமின்றி தாக்கிய காட்சி நம் நெஞ்சை பதற வைத்ததை யாரும் மறந்திருக்க முடியாது.
இதேபோல் இலங்கை அரசும் “எல்லை தாண்டி மீன்பிடித்தனர்” என்ற காரணத்தைக் கூறி இதுவரை சில நூறுக்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்களை சுட்டுக் கொன்றுள்ளது.
இது தொடர்கதையாகிவிட்டது. மனித உயிர் அவ்வளவு மலிவாகிவிட்டதா? அதிலும் தமிழனின் உயிர் அவ்வளவு இழிவாகிவிட்டதா?
அப்போதைய மத்திய அரசோ, கர்நாடக அரசோ, ஆந்திர அரசோ, தமிழ்நாடு அரசோ, இலங்கை அரசோ – எந்த அரசும் இதற்கு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. கண்டிக்கவும் இல்லை. தமிழர் தலைமையில் தமிழ்நாடு ஆளப்படாததால் வந்த விளைவு இது. கேட்க நாதியில்லாமல் வந்தவன் போனவனெல்லாம் தமிழனை சுட்டு வீழ்த்துகிறான்.
எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டு, சம்பந்தப்பட்ட கர்நாடக வனத்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து உரிய நீதியைப் பெற்றுத் தர வேண்டும். இனி இதுபோன்ற கொடுமைகள் நடைபெறாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் சார்பில் திரு.பாலமுருகன் வீராசாமி தமதறிக்கையில் பதிவுச் செய்தார்.

