
கோலாலம்பூர் ஆக 6-
மலேசிய இந்தியர்களின் பொருளாதாரப் பங்களிப்பை 2040ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மொத்த பொருளாதாரத்தில் 10 விழுக்காடாக உயர்த்துவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று சிலாங்கூர் இந்திய வர்த்தக மற்றும் தொழில் முனைவோர் சங்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சண்முகநாதன் கோரிக்கை வலியுறுத்தி உள்ளார்.
இதற்காக தற்போது உள்ள அடிப்படை நிலையை அரசாங்கம் முதலில் நிர்ணயித்து, 2030, 2035 மற்றும் 2040ஆம் ஆண்டுகளுக்கான அளவிடக்கூடிய பொருளாதார இலக்குகளை வகுக்க வேண்டும்.
மலேசிய இந்தியர்களின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள முக்கியமான நான்கு பரிந்துரைகள் வருமாறு:
- 2040க்குள் 10% பொருளாதாரப் பங்களிப்பு
மலேசிய இந்தியர்களின் பொருளாதாரப் பங்களிப்பை 2040ஆம் ஆண்டுக்குள் 10 விழுக்காடாக உயர்த்த வேண்டும். அதற்கான அடிப்படை நிலையை அரசாங்கம் நிர்ணயித்து, 2030, 2035 மற்றும் 2040ஆம் ஆண்டுகளுக்கான அளவிடக்கூடிய இலக்குகளை உருவாக்க வேண்டும். - தனி தொழில் முனைவோர் மேம்பாட்டு நிதி
புதிய தொழில்கள் உருவாக்கம், நிறுவன வளர்ச்சி, தனியார் தொழில்முனைவு, தொழில்முறை சேவைகள் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் பங்கேற்பு ஆகியவற்றை ஊக்குவிக்க தனி தொழில் முனைவோர் மேம்பாட்டு நிதி அமைக்கப்பட வேண்டும்.
மேலும், மலேசியா–இந்தியா–ஆசியான் (ASEAN) நாடுகளுக்கு இடையிலான கூட்டு முயற்சிகளுக்கான வாய்ப்புகளை உருவாக்கி, அவற்றை அளவிடக்கூடிய KPI-களுடன் செயல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
- ஆண்டுதோறும் 5,000 தொழில்முனைவோர்
அடுத்த 20 ஆண்டுகளில் ஆண்டுதோறும் குறைந்தது 5,000 மலேசிய இந்திய தொழில்முனைவோர்களை உருவாக்க வேண்டும் என்பதும் மற்றொரு முக்கிய இலக்காக முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 20 ஆண்டுகளில் மொத்தம் 100,000 தொழில்முனைவோர்களை உருவாக்கி, பல்வேறு துறைகளில் வலுவான தொழில் சூழலை உருவாக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இதற்காக பயிற்சி, தொழில் தொடக்க உதவி, நிதி அணுகல் மற்றும் தொழில் வளர்ச்சிக்கான ஆதரவு ஆகியவை முறையாக வழங்கப்பட வேண்டும் என்றார்.
- தேசிய இந்திய வணிகப் பதிவு மற்றும் தொழில்முனைவோர் தரவுத்தளம்
நாட்டில் செயல்படும் இந்தியர்களின் வர்த்தகங்கள் மற்றும் தொழில்முனைவோர் குறித்த முழுமையான தகவல்களை உள்ளடக்கிய தேசிய இந்திய வணிகப் பதிவு மற்றும் தொழில்முனைவோர் தரவுத்தளம் உருவாக்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
இதில் தொழில்களின் எண்ணிக்கை, அளவு, துறை, வருவாய், வேலைவாய்ப்பு உருவாக்கம், வாழ்வாதார நிலைத்தன்மை, நிதி அணுகல் மற்றும் பொருளாதாரப் பங்களிப்பு போன்ற தகவல்கள் இடம்பெற வேண்டும்.
இதுபோன்ற துல்லியமான தரவுத்தளம் உருவாக்கப்பட்டால், மலேசிய இந்தியர்களுக்கான அரசாங்கக் கொள்கைகள் மற்றும் நிதித் திட்டங்களை உண்மையான தேவைகளின் அடிப்படையில் வகுப்பதற்கும், ஒதுக்கப்படும் நிதியின் பயன்களை அளவிடுவதற்கும் உதவும் .
மேலும் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் மற்ற இனங்களுக்கு நிதி ஒதுக்குவதை பற்றி யாரும் கேள்வி எழுப்பக்கூடாது. அது அவர்களின் உரிமையாகும்.
ஆனால் அவர்களுக்கு ஒதுக்கப்படும் மொத்த நிதியில் 10% இந்திய சமுதாயத்திற்கான ஒதுக்க வேண்டும்.
இந்த நிதியின் மூலம் அதிகமான வர்த்தகர்களை உருவாக்க முடியும்.
குறிப்பாக வரும் 2040க்குள் 100,000 இந்தியர்களை தொழில் முனைவர்களாக
உருவாக்க முடியும் வேண்டும் என்று அவர் கூறினார்.
இந்திய அரசு சாரா இயக்கங்கள், வர்த்தக சம்மேளனங்கள் ஆகியவற்றின் தலைவர்களுடன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த வாரம் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பில் நான் உட்பட 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பில் பேசிய பிரதமர் மடானி அரசாங்கம் இந்திய சமுதாயத்திற்காக பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்தார்.

