நஜிப்புக்கு நிபந்தனை மன்னிப்பு வழங்கப்பட்டாலும், ஊழலுக்கு எதிரான போராட்டம் தொடரும்: பிரதமர் அன்வார்

ஷா ஆலாம், செப்.18: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கு நிபந்தனையுடன் மன்னிப்பு வழங்கப்பட்டாலும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்வதில் அரசாங்கம் உறுதியாக இருக்கும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

நஜிப்பிற்கு வழங்கப்பட்டுள்ள நிபந்தனை மன்னிப்பு, ஊழல் அல்லது அதிகார துஷ்பிரயோகத்தை அரசாங்கம் பொறுத்துக்கொள்ளும் என்பதைக் குறிக்கவில்லை என அவர் தெளிவுபடுத்தினார்.

அனைத்து ஊழல் தடுப்பு வழக்குகளும் உரிய சட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், நஜிப் ரசாக்கிற்கு நிபந்தனையுடன் மன்னிப்பு வழங்கியிருப்பது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், இந்த முடிவானது நாடு ஊழல் மற்றும் அரசுப் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தும் நிலைக்கு மீண்டும் செல்ல வேண்டும் என்பதைக் குறிக்காது என்றார்.

பிரதமர் என்ற முறையில், இந்த விவகாரம் தொடர்பான சட்டரீதியான விளைவுகள் மற்றும் நாட்டின் நிலைத்தன்மை மீது ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து ஆட்சியாளர்களுக்கு ஆலோசனை வழங்குவது தமது பொறுப்பு என்றும் அன்வார் கூறினார்.

இந்த விவகாரத்தில் சட்டத்துறைத் தலைவரின் ஆலோசனையையும் தாம் கருத்தில் கொண்டதாக அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், கூட்டரசு அரசியலமைப்பின் கீழ் மாமன்னருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் இறுதியானது. அந்த முடிவை அனைவரும் நேர்மறையான கண்ணோட்டத்துடன் ஏற்றுக்கொள்வார்கள் என தாம் நம்புவதாகவும் அன்வார் குறிப்பிட்டார்.

எந்தவொரு தலைவராக இருந்தாலும் அல்லது நாட்டின் எந்தவொரு குடிமகனாக இருந்தாலும், தனிப்பட்ட செல்வத்தைப் பெருக்குவதற்காக முறைகேடு அல்லது அதிகார துஷ்பிரயோகம் செய்வதை இனி நாடு அலட்சியமாகக் கருதாது என்றும் பிரதமர் உறுதியளித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles