காடேக் தொகுதியில் நடராஜா செல்லப்பாவுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்; மஇகா அடிமட்ட உறுப்பினர்களின் கருத்தை கட்சித் தலைமை பரிசீலிக்க வேண்டும்!

மலாக்கா, செப். 19-

எதிர்வரும் மலாக்கா மாநிலத் தேர்தலில் (PRN Melaka), காடேக் (N.07 Gadek) சட்டமன்றத் தொகுதியில் மஇகா சார்பில் நடராஜா செல்லப்பாவுக்கு வேட்பாளர் வாய்ப்பு வழங்க வேண்டும் என மஇகா அடிமட்ட உறுப்பினர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நடராஜா செல்லப்பா மலாக்காவைச் சேர்ந்தவர் என்பதுடன், மஇகாவில் நீண்டகாலமாக பல்வேறு பொறுப்புகளை வகித்து கட்சிப் பணியாற்றி வருபவர் என மஇகா தங்கா பத்து தொகுதிச் செயலாளர் கார்த்திகேயன் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புக்கிட் காஜாங் மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர், ஜாசின் பகுதி மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர், மலாக்கா மாநில Youth Squad தலைவர், மலாக்கா மாநில மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர், புக்கிட் காஜாங் மஇகா கிளைத் தலைவர், மலாக்கா மாநில நிர்வாகச் செயலாளர் மற்றும் மலாக்கா மாநில மஇகா செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை நடராஜா செல்லப்பா வகித்துள்ளதாக கார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அவர் மலாக்கா மாநில மஇகா துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருவதாகவும், இதன் மூலம் அரசியல் களத்தில் நீண்டகால அனுபவம் கொண்டவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து இன மக்களுடனும் எளிதில் பழகக்கூடியவராகவும், மலாய், ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் சிறந்த புலமை கொண்டவராகவும் நடராஜா விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மலாக்கா மாநிலத் தேர்தலின்போது காடேக் தொகுதிக்கான வேட்பாளர் பரிசீலனையில் நடராஜா செல்லப்பாவின் பெயரும் இடம்பெற்றிருந்ததாகவும், இறுதிக்கட்டத்தில் அத்தொகுதிக்கான வேட்பாளர் வாய்ப்பு V.P. சண்முகத்திற்கு வழங்கப்பட்டதாகவும் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனின் முடிவை மதித்து, கட்சி வேட்பாளர் V.P. சண்முகத்தின் வெற்றிக்காக தொடர்ந்து பணியாற்றியவர் நடராஜா செல்லப்பா என்றும் அவர் கூறியுள்ளார்.

2021ஆம் ஆண்டு நடைபெற்ற மலாக்கா மாநிலத் தேர்தலில் மஇகா சார்பில் போட்டியிட்ட V.P. சண்முகம், காடேக் தொகுதியில் 559 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

அதனைத் தொடர்ந்து, நடராஜா செல்லப்பா காடேக் தொகுதியில் தொடர்ந்து களப்பணிகளில் ஈடுபட்டு வருவதுடன், பொதுமக்களின் பல்வேறு பிரச்சினைகள், குறிப்பாக நலத்திட்டங்கள் மற்றும் இளைஞர்கள் தொடர்பான விவகாரங்களில் உதவி செய்து வருவதாகவும் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

தனது சொந்தத் தொழிலில் பல்வேறு பொறுப்புகள் இருந்தபோதிலும், பொதுமக்களின் குறைகள் மற்றும் தேவைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருபவர் நடராஜா செல்லப்பா என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன், எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்னர் கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களின் கருத்துகளை முழுமையாகப் பரிசீலிக்க வேண்டும் எனவும் கார்த்திகேயன் ஆறுமுகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதேவேளை, மஇகா தேசிய தலைவர் முன்மொழியும் வேட்பாளருக்கு மலாக்கா முதலமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் ரவூப் யூசோப் வலுவான ஆதரவை வழங்குவார் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

நடராஜா செல்லப்பாவுக்கு காடேக் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டால், அத்தொகுதி மக்களுக்காக பல்வேறு மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் கொண்டுவருவதுடன், பாரிசான் நேஷனல் கூட்டணியின் வெற்றிக்காகவும் சிறப்பாகப் பணியாற்றுவார் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாகவும் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

“கட்சிப் பதவியை எதிர்பார்த்து அல்லாமல், மக்கள் மற்றும் கட்சிக்காக தொடர்ந்து பணியாற்றி வரும் தலைவருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே அடிமட்ட உறுப்பினர்களின் விருப்பம். எனவே, காடேக் தொகுதிக்கான வேட்பாளர் தேர்வில் நடராஜா செல்லப்பாவின் பெயரை கட்சித் தலைமை பரிசீலிக்க வேண்டும்,” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles