வேலைவாய்ப்பு காப்பீட்டுத் திட்டம் மேம்பாடு: சந்தாதாரர்கள் 25,000 ரிங்கிட் வரை ஆதரவு பெறலாம் – டத்தோஶ்ரீ ரமணன்

பெட்டாலிங் ஜெயா, செப் 19 –
வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் சமூகப் பாதுகாப்பு அமைப்பின் (பெர்கேசோ) வேலைவாய்ப்பு காப்பீட்டுத் திட்டத்தின் (எஸ்.ஐ.பி) நன்மைகள் மேம்படுத்தப்பட்டு, ஒரு சந்தாதாரர் மொத்தம் 25,000 ரிங்கிட் வரை ஒட்டுமொத்த ஆதரவையும் பாதுகாப்பையும் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த மேம்பாட்டில், முன்னதாக வேலைக்குத் திரும்புபவர்களுக்கான உதவித்தொகை (இ.பி.எஸ்.ஏ) விகிதம், எஞ்சிய வேலை தேடும் உதவித்தொகையில் 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும், தங்களின் இருப்பிடத்திலிருந்து 100 கிலோமீட்டருக்கு மேல் தொலைவில் புதிய வேலை வாய்ப்பைப் பெறும் சந்தாதாரர்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் 1,000 ரிங்கிட் இடப்பெயர்வு உதவித்தொகையும் (இ.பி.என்) புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், தினசரி பயிற்சி உதவித்தொகையும் 10 ரிங்கிட்டிலிருந்து 30 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.

“தற்போதைய வேலைச்சந்தை தேவைகளுக்கு ஏற்ப சந்தாதாரர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கு வலுவான ஆதரவை வழங்கும் வகையில், பயிற்சி கட்டணத்திற்கான அதிகபட்ச வரம்பும் 4,000 ரிங்கிட்டிலிருந்து 7,000 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்புகளைப் பொருத்துதல், தொழில் ஆலோசனைகள் மற்றும் மறுபயிற்சிகளின் மூலம் பெர்கேசோவின் சேவைகள் சந்தாதாரர்களுடன் இணைந்து நகர வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்,” என்று இங்கு நடைபெற்ற ‘மெகா ஐ-லிண்டுங் யு: மக்களுடன் கெசுமா’ விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய ரமணன், 500 ஈ-ஹெய்லிங் ஓட்டுநர்கள் மற்றும் பி-ஹெய்லிங் விநியோகஸ்தர்களுக்கான சமூகப் பாதுகாப்பை விரிவாக்கம் செய்ய சேவைத் தள நிறுவனங்களிடமிருந்து 1.514 மில்லியன் ரிங்கிட் நன்கொடை பெறப்பட்டதன் மூலம் இந்த விழா கிக் பொருளாதாரத் துறைக்கும் ஒரு நற்செய்தியைக் கொண்டு வந்துள்ளது என்றார்.

இந்தத் தொகையில் ஃபூட் பண்டா நிறுவனத்திடமிருந்து 1 மில்லியன் ரிங்கிட், கிராப் நிறுவனத்திடமிருந்து 500,000 ரிங்கிட் மற்றும் ஹாலோ நிறுவனத்திடமிருந்து 14,412 ரிங்கிட் 40 சென் அடங்கும்.

கிக் ஊழியர்களுக்குச் சமூகப் பாதுகாப்புச் சந்தாவை சேவைத் தள நிறுவனங்கள் வழங்குவதைக் கட்டாயமாக்கும் அரசாங்கக் கொள்கை அமலாக்கத்திற்கு ஏற்ப இந்த நடவடிக்கை அமைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“ஒவ்வொரு உணவு விநியோகஸ்தர் மற்றும் ஓட்டுநருக்குப் பின்னாலும் அவர்களின் வருமானத்தை நம்பி இருக்கும் குடும்பங்கள் உள்ளன. எதிர்பாராத அசம்பாவிதங்கள் நிகழும்போது இந்தச் சமூகப் பாதுகாப்பு மிகவும் முக்கியமானதொரு பாதுகாப்பு வலையமைப்பாகத் திகழ்கிறது,” என்று அவர் கூறினார்.

24 மணி நேரப் பாதுகாப்புத் திட்டம் குறித்துப் பேசிய ரமணன், 87 சதவீத ஊழியர்கள் இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்ததோடு, சமூக ஊடகங்களில் பரவும் போலித் தகவல்களைக் கண்டு மக்கள் ஏமாற வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில், சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த 400 இல்லத்தரசிகளின் சந்தாக் கட்டணத்தை ஏற்கும் வகையில், ‘லிண்டுங் காசே சுரி ரூமா’ திட்டத்தின் கீழ் 48,000 ரிங்கிட் நிதியுதவியையும் அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பெர்கேசோ வாரியத் தலைவர் டத்தோஸ்ரீ சுபாஹான் கமால் மற்றும் பெர்கேசோ குழும தலைமைச் செயல் அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் முகமது அஸ்மான் அஜீஸ் முகமது ஆகியோரும் கலந்துகொண்டனர்.

செப்டம்பர் 18 முதல் 20 வரை மூன்று நாட்களுக்கு நடைபெறும் ‘மெகா ஐ-லிண்டுங் யு: மக்களுடன் கெசுமா’ விழாவில், 25 முதலாளிகள் பங்கேற்கும் ‘மைஃபியூச்சர்ஜோப்ஸ்’ வேலைவாய்ப்பு முகாம் மூலம் 12,000 ரிங்கிட் வரை சம்பளத்துடன் 2,000 வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இது தவிர, மனிதவள அமைச்சின் 11 முகமைகளும் இதில் அங்கமாகியுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles