மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் ‘இளைஞர் கலந்தாய்வு தளம் 2026’ மலாக்காவில் கோலாகலத் தொடக்கம் கண்டது!

மலாக்கா, செப் 23:
கடந்த 20 செப்டம்பர் 2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று, மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையும் மலாக்கா மாநிலத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையுடன் இணை ஏற்பாட்டிலும் “மணிமன்றப் பேரவையின் இளைஞர் கலந்தாய்வு தளம் 2026” மலாக்கா, ஆயர் குரோவில் அமைந்துள்ள WYF மண்டபத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. 

“இன்றைய தலைமுறை, நாளைய தலைவர்கள்” எனும் கருப்பொருளில், நடைபெற்ற நிகழ்வில், நாடு முழுவதிலுமிருந்து தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் தலைமைத்துவத்தினரும் திரளான இளைஞர் மணிகளும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். 

இந்த நிகழ்வினை அதிகாரப்பூர்வ தொடக்க விழாவை, மலாக்கா மாநில முதலமைச்சர் மாண்புமிகு டத்தோ ஶ்ரீ உத்தாமா அவர்களின் பிரதிநிதியாக வருகை தந்த மலாக்கா மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் அரசு சாரா அமைப்புகளுக்கான அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு டத்தோ வி.பி சண்முகம் அவர்கள் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்துச் சிறப்பித்தார். இளைஞர்களின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் மலாக்கா மாநில முதலமைச்சருக்கும், நிகழ்வைச் சிறப்பித்த டத்தோ வி.பி சண்முகம் அவர்களுக்கும் பேரவை தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.

“அடுத்த தலைமுறையின் எதிர்காலம்; யார் பொறுப்பு? எனும் தலைப்பில் சிறப்பு இளைஞர் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கத்தின்
நெறியாளராக திரு. ஜான் கென்னடி சவேரியார் அவர்களும் பேச்சாளர்களாக செல்வி. விக்னேஸ்வரி ஜான் டி குரூஸ், திரு. தினகரன் சங்கரன், திரு. சுரேந்திரன் சுந்தரராஜ் அவர்களும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். இக்கருத்தரங்கில் இளைஞர்களின் எதிர்காலச் சவால்கள், சமூகப் பங்களிப்பு மற்றும் தலைமைத்துவப் பொறுப்புகள் குறித்து ஆழமாக விவாதிக்கப்பட்டு, கலந்துகொண்ட பிரதிநிதிகளுடனான கேள்வி பதில் அங்கமும் நடைபெற்றது. 

மேலும், கலந்தாய்வு தளத்தில் பிற்பகுதியில் “மக்கள் அரங்கம்” அமர்வு , பரதநாட்டியம் மற்றும் சிலம்பக் கலைப் படைப்புகள், மன்றமணிகளுக்குச் சிறந்த சாதனையாளர்கள் சிறப்பு விருதுகள் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் தேசியத் தலைவர் மதிப்புமிகு திரு. முருகன் மணியம், தேசியப் பொதுச் செயலாளர் மதிப்புமிகு திரு. கோபிந்தரன், தேசியப் பொறுப்பாளர்கள், தேசிய உச்சமன்ற உறுப்பினர்கள், மாநிலத் தலைவர்கள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்த பிரதிநிதிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.

“நாடு முழுவதிலுமிருந்து திரண்ட நமது இளைஞர் மணிகளின் பங்கேற்பு, தமிழ் இளைஞர்களின் ஒற்றுமை, உத்வேகம் மற்றும் அர்ப்பணிப்பு தொடர்ந்து உயிர்ப்புடன் இருப்பதையும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னோக்கிப் பயணிப்பதையும் எடுத்துக்காட்டுகிறது” என மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் தேசிய இளைஞரணி தலைவர் திரு அவினாஷ் சண்முகம் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles