புகைமூட்டம்: திங்கட்கிழமை பிரதமர் அன்வார் தலைமையில் உயர்மட்டக் கூட்டம்

புத்ராஜெயா, அக். 16 – மலேசியாவில் நிலவி வரும் புகைமூட்டம், அதன் காரணமாகப் பொதுமக்களின் உடல்நலத்தில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் இந்தோனேசியாவில் தொடரும் காட்டுத்தீ ஆகியவை குறித்து ஆராய்வதற்காகப், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் எதிர்வரும் திங்கட்கிழமை உயர்மட்டக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் புகைமூட்டப் பிரச்சனையைக் கையாள்வதற்காகப் பல்வேறு அமைச்சுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது, பள்ளிகளின் செயல்பாடுகள் மற்றும் வெளிப்புற நடவடிக்கைகள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட அம்சங்கள் விவாதிக்கப்படும்.

இதனை தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புகைமூட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் கையாள்வதற்கான நடவடிக்கைகளில் சுகாதார அமைச்சு (MOH), கல்வி அமைச்சு (MOE) மற்றும் இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சு (KBS) ஆகியவை பங்கேற்கும் என்றார்.

இதற்கிடையில், புகைமூட்ட நிலைமையைக் கையாள்வதற்காக தற்போது நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்கள் தேசிய நடவடிக்கைத் திட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளதாகக் கல்வி அமைச்சும் சுகாதார அமைச்சும் அமைச்சரவைக்குத் தெரிவித்துள்ளன.

அந்தத் திட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருப்பதாகவும் ஃபஹ்மி குறிப்பிட்டார்.

எனினும், தற்போதைய காற்றுத் தர நிலைமை மற்றும் பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகளில் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து திங்கட்கிழமை நடைபெறும் கூட்டத்தில் விரிவாக ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபுறம், இந்தோனேசியாவில் தொடர்ந்து பரவி வரும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த மலேசியா உதவி வழங்க முன்வந்துள்ள விவகாரம் குறித்தும் ஃபஹ்மி விளக்கமளித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles