புகை மூட்டமா அல்லது கப்பல்களின் புகை வெளியேற்றமா?: துறைமுகங்களில் கப்பல் மாசு வெளியேற்றத்தைக் கண்காணிக்க வேண்டும்: கடல்சார் நிபுணர்கள்

கிள்ளான், அக் ,22
இந்தோனேசியாவிலிருந்து உருவாகும் எல்லை தாண்டிய புகைமூட்டம் மலேசியாவைப் பாதிக்கும் காலங்களில், முக்கிய துறைமுகங்களைச் சுற்றியுள்ள காற்று மாசுபாட்டிற்கு கப்பல்களின் புகை வெளியேற்றம் எந்த அளவுக்குப் பங்களிக்கிறது என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

கடல்சார் தொழில்துறை நிபுணரும் மேரிடைம் நெர்வோர்க் நிறுவனத்தின் தலைமை இயக்குநருமான டத்தோஸ்ரீ ஆர். ஜெயந்திரன் இதனை வலியுறுத்தியுள்ளார்.

உலகின் மிகப் பரபரப்பான கடல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான மலாக்கா நீரிணைக்கு அருகில் மலேசியா அமைந்துள்ளதால், கடல் எரிபொருள் விநியோகத் துறையை மேம்படுத்துவதற்குப் பெரும் வாய்ப்புகள் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இருப்பினும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் புறக்கணிக்கக் கூடாது என அவர் தெரிவித்தார்.

மலேசியக் கடல் எல்லை வழியாக அதிகமான கப்பல்கள் பயணிக்கும் நிலையில், அவற்றின் புகை வெளியேற்றம் முறையாகக் கண்காணிக்கப்படுவதையும் துறைமுகங்கள் நிலையான வளர்ச்சியை நோக்கிச் செயல்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.

குறிப்பாக, எல்லை தாண்டிய புகைமூட்டம் மலேசியாவைப் பாதிக்கும் காலங்களில், கப்பல் போக்குவரத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கங்களுக்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.என்று அவர் அறிக்கையொன்றில் தெரிவித்தார்.

அனைத்துலக கடல் போக்குவரத்துப் பாதைகளில் அமைந்துள்ள கிள்ளான் துறைமுகம், ஜொகூரில் உள்ள துறைமுகங்கள், கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பும் சேவைகளை மலேசியாவில் மேற்கொள்ள ஈர்ப்பதற்கான முக்கிய வாய்ப்புகளை வழங்குவதாகவும் அவர் கூறினார்.
இருப்பினும், கப்பல்களில் பயன்படுத்தப்படும் கனரக எரிபொருள் எண்ணெய், குறிப்பாக அதிக கந்தகத்தைக் கொண்ட எரிபொருள் எண்ணெய் (HSFO), எரிபொருளின் வகை மற்றும் இயந்திரத்தின் செயல்பாட்டு நிலைமைகளைப் பொறுத்து கந்தக ஆக்சைடுகள், நுண்துகள்கள் உள்ளிட்ட பல்வேறு காற்று மாசுபடுத்திகளை வெளியேற்றக்கூடும்.

அனைத்துலக கடல்சார் அமைப்பு (IMO), குறிப்பிட்ட மாசு வெளியேற்றக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வெளியே இயங்கும் கப்பல்களில் பயன்படுத்தப்படும் எரிபொருளுக்கான உலகளாவிய கந்தக வரம்பை 2020 ஜனவரி 1 முதல் 0.50 சதவீதமாக நிர்ணயித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட வெளியேற்ற வாயு சுத்திகரிப்பு அமைப்பை (Scrubber) பயன்படுத்தி, நடைமுறையில் உள்ள விதிமுறைகளுக்கு இணங்கும் கப்பல்கள் அதிக கந்தகமுள்ள எரிபொருளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படலாம்.

கப்பல்களில் பயன்படுத்தப்படும் எரிபொருளுக்கான கந்தக வரம்பு, சரக்காகக் கொண்டு செல்லப்படும் அதிக கந்தகமுள்ள எரிபொருளுக்கான விதிமுறைகள் ஆகியவை தனித்தனியானவை.

முக்கிய துறைமுகங்களைச் சுற்றியுள்ள காற்றின் தரத்தைக் கண்காணித்தல், கடல்சார் எரிபொருளுக்கான கந்தக வரம்புகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதைச் சரிபார்த்தல், புகைமூட்டக் காலங்களில் மாசுபாட்டின் அளவை ஆய்வு செய்தல் ஆகிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ளலாம் என டத்தோஸ்ரீ ஜெயந்திரன் பரிந்துரைத்தார்.

இதன் மூலம், எல்லை தாண்டிய புகைமூட்டத்தால் ஏற்படும் மாசுபாட்டையும் கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட உள்ளூர் நடவடிக்கைகளால் ஏற்படும் மாசுபாட்டையும் வேறுபடுத்தி அறிய முடியும் என்றும், கடல்சார் தொழில்துறையின் வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் இடையில் சமநிலையைப் பேண முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதே கருத்தை வலியுறுத்திய மலேசியா திரெங்கானு பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் நஸேரி காலிட், புகைமூட்டம் நிலவும் காலங்களிலும் கப்பல்களின் புகை வெளியேற்றத்தை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மலேசியா அதிகமான கப்பல்களை ஈர்ப்பதற்கும் கடல்வழி வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கும் மேற்கொள்ளும் முயற்சிகள், அதன் மாசு வெளியேற்ற இலக்குகளையும் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான சர்வதேசக் கடப்பாடுகளையும் பாதிக்கக் கூடாது என அவர் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles