தமிழ்ச் சொல்லான “தீபாவளி” என்பதைச் சிதைத்து “தீவாளி” எனப் பயன்படுத்துவதை ஏற்க முடியாது – உலகத் தமிழர் பாதுகாப்புச் செயலகம் கடும் கண்டனம்!

மலேசியத் தமிழ் மக்களிடையே நமது பாரம்பரிய மொழி வடிவத்தைச் சிதைக்கும் நோக்கில், ஊடகங்கள் மற்றும் பொதுவெளியில் ‘தீபாவளி’ என்ற சொல் சிதைக்கப்படுவதை ஏற்க முடியாது என உலகத் தமிழர் பாதுகாப்புச் செயலகம் தனது கண்டனத்தைப் பதிவுச் செய்வதாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.

உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் பாதுகாப்பு, தொன்மையான பண்பாட்டு அடையாளங்கள், தூய தமிழ் மொழி மரபுகளைப் பாதுகாப்பதையே முதன்மை நோக்கமாகக் கொண்டு உலகத் தமிழர் பாதுகாப்புச் செயலகம் இயங்கி வருகிறது.

அண்மைக் காலமாக மலேசியாவிலும் பிற நாடுகளிலும் உள்ள சில ஊடகங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் சமூக வலைத்தளப் பக்கங்களில், பெரும்பான்மை தமிழர்கள் கொண்டாடும் “தீபாவளி” திருநாளின் பெயரைச் சிதைத்து, “தீவாளி” என்ற தவறான எழுத்து வடிவத்திலும் பேச்சு வடிவத்திலும் பரப்பி வருவதைக் காண முடிகிறது. இது தமிழ் மொழியின் மரபார்ந்த இலக்கண அமைப்பிற்கும் பண்பாட்டிற்கும் எதிரானதாகும்.

‘தீபாவளி’ என்பது ‘தீபம்’ (விளக்கு), ‘ஆவளி’ (வரிசை) ஆகிய சொற்களின் கூட்டு வடிவமாகும். இதற்கு “விளக்குகளின் வரிசை” என்று பொருள். இலக்கண ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் “தீபாவளி” என்பதே மிகச் சரியான, மரபான வடிவமாகும். இதனைத் திரித்து “தீவாளி” என்று பயன்படுத்துவது திட்டமிட்ட மொழிச் சிதைவாகவே கருதப்படும் என்றார்.

இந்தத் தீபாவளித் திருநாள் வடநாட்டுப் புராணக் கதைகளின் வழி வந்திருப்பினும், தமிழர் மரபுக்குத் தொடர்பற்றதாக இருப்பினும், நம் முன்னோர்களுக்கான ‘தென்புலத்தார் நாளையும்’, ‘கார்த்திகைத் தீபத் திருநாளையும்’ இந்த விடுமுறையைப் பயன்படுத்தித் தமிழர்கள் தீபாவளியாகக் கொண்டாடி வருகிறார்கள்.

புராணக் கதையை நாம் ஏற்காவிட்டாலும், குடும்பத்தோடு ஒற்றுமையுடன் கூடிக் கொண்டாடும் அந்த மகிழ்ச்சியை மறுக்க இயலாது.

ஆகவே, சொல்லும் வார்த்தையைத் தெளிவாகச் சொல்லுங்கள். தமிழுக்கானது என்று சொல்ல வேண்டுமென்றால், தமிழைச் சிறுமைப்படுத்தாமல் சரியாகச் சொல்லுங்கள் என்றார்.

மலேசியத் தமிழர் அரசியல் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், ம.இ.கா. துணைத் தலைவருமான மாண்புமிகு டத்தோசிறீ எம்.சரவணன் அவர்கள் இப்பிழை திருத்தத்தைச் சுட்டிக்காட்டி இரு வாரங்களுக்கு முன் கடிதம் அனுப்பியும், இன்னும் சரிசெய்யப்படாதது தமிழ் மக்களை அவமதிப்பதாகும்.

தமிழர் வரலாற்றை அறியாதவர்கள் அரசு அதிகாரிகளாக, அமைச்சர்களாக, அனைத்துமாக இருப்பதால்தான் இதுபோன்ற விளைவுகளும், கேடுகளும், இழிவுகளும் நம் இனத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன என்றார்.

எனவே, “மொழி சிதைந்தால் இனம் சிதையும்” என்ற அடிப்படையை உணர்ந்து, மலேசியாவில் உள்ள அனைத்துத் தமிழ் ஊடகங்கள், விளம்பர நிறுவனங்கள், வணிக அமைப்புகள் மற்றும் சமூகப் பெரியோர்கள் தங்களின் வாழ்த்துச் செய்திகளிலும், விளம்பரப் பலகைகளிலும் “தீவாளி” என்ற பிழையான சொல்லைத் தவிர்த்து, “தீபாவளி” என்ற சரியான மரபுச் சொல்லையே பயன்படுத்த வேண்டும் என உலகத் தமிழர் பாதுகாப்புச் செயலகம் மிகப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறதென அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வீராசாமி தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles