164 இந்திய சமூக வழிபாட்டுத் தலங்களுக்கு 3.28 மில்லியன் ரிங்கிட் மித்ரா நிதிஇந்திய சமூகத்தின் நலனில் மடானி அரசாங்கம் உறுதி! – டத்தோஶ்ரீ ரமணன்

புத்ராஜெயா, அக். 27 –
நாடு முழுவதும் உள்ள 164 இந்து, சீக்கிய, கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களின் சமூகநல மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக மலேசிய மடானி அரசாங்கம், மலேசிய இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ரா மூலம் மொத்தம் 3.28 மில்லியன் ரிங்கிட் நிதியுதவியை வழங்கியுள்ளது.

இந்த நிதியுதவி, தர்மா மடானி, ஹார்மோனி மடானி திட்டங்களின் கீழ் வழங்கப்படுவதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

வழிபாட்டுத் தலங்கள் சமய வழிபாடுகளுக்கான மையங்களாக மட்டுமன்றி, சமூக மேம்பாடு, கல்வி, கலாசாரம், ஆன்மிக வளர்ச்சி, இளைய தலைமுறையினரின் முன்னேற்றத்திற்கும் முக்கியப் பங்காற்றுவதாக அவர் கூறினார்.

“மடானி அரசாங்கம் அனைத்து சமூகங்களின் நலனிலும் அக்கறை கொண்டுள்ளது. குறிப்பாக, இந்திய சமூகத்தின் மேம்பாட்டில் வழிபாட்டுத் தலங்கள் ஆற்றும் பங்களிப்பை நாங்கள் அங்கீகரிக்கிறோம். இந்த நிதியுதவி, அவற்றின் செயல்பாடுகளை வலுப்படுத்துவதுடன், சமூகத்திற்குப் பயனளிக்கும் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கவும் உதவும்.

“வழிபாட்டுத் தலங்கள் ஆன்மிக வளர்ச்சியை ஊக்குவிக்கும் இடங்களாக மட்டுமன்றி, சமூக ஒற்றுமை, கலாசாரப் பாதுகாப்பு, இளைய தலைமுறையினரின் ஆளுமை மேம்பாட்டிற்கான மையங்களாகவும் திகழ வேண்டும் என்பதே எங்களது நோக்கம்,” என்று அவர் தெரிவித்தார்.

ஹார்மோனி மடானி திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ், 57 சீக்கிய குருத்வாராக்கள், 12 கிறிஸ்தவ தேவாலயங்கள் என மொத்தம் 69 வழிபாட்டுத் தலங்களுக்கு 1.38 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வழிபாட்டுத் தலத்திற்கும் 20,000 ரிங்கிட் வழங்கப்படுகிறது.

இதற்கிடையில், தர்மா மடானி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், 95 இந்து ஆலயங்களுக்கு 1.9 மில்லியன் ரிங்கிட் நிதியுதவியை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.

இதன் மூலம், தர்மா மடானி திட்டத்தின் கீழ் இதுவரை அங்கீகரிக்கப்பட்ட மொத்த நிதி 15.42 மில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளதுடன், நாடு முழுவதும் உள்ள 771 இந்து ஆலயங்கள் பயனடைந்துள்ளன.

இந்த நிதியுதவி, வழிபாட்டுத் தலங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, சமய, ஆன்மிக, கலாசார, சமூகநல நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தகுதிபெறும் வழிபாட்டுத் தலங்களுக்கான ஆதரவைத் தொடர்ந்து வலுப்படுத்துவதன் மூலம், இந்திய சமூகத்தின் சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்துவதுடன், பல்வேறு இன மக்களிடையே நல்லிணக்கத்தையும் தேசிய ஒற்றுமையையும் மேலும் வலுப்படுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக டத்தோ ஸ்ரீ ரமணன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பினாங்கு துணை முதலமைச்சர் ஜக்தீப் சிங் தியோ, பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன், மனிதவள அமைச்சின் துணைச் செயலாளர் டாக்டர் ஹாஜி முகமட் ஷஹாரின் பின் உமார், மித்ரா தலைமை இயக்குநர் ரவிந்திரன் நாயர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles