
மலாக்கா, நவ. 5 –
மலாக்கா மாநிலத்தில் உள்ள 21 தமிழ்ப்பள்ளிகளின் கற்பித்தல், கற்றல் வசதிகளை மேம்படுத்துவதற்காக, மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ரா, இவ்வாண்டு மொத்தம் 755,390 ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது.
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறுகையில், இந்த நிதி மடானி தளவாட உதவி, மாணவர்களுக்கான கூடுதல் பயிற்சி வகுப்புகள், ஸ்மார்ட் போர்டு உள்ளிட்ட டிஜிட்டல் கற்றல் உபகரணங்கள் வழங்குதல் போன்ற பல்வேறு கல்வி மேம்பாட்டுத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார்.
இத்திட்டங்கள் கல்வி அமைச்சு, பள்ளி நிர்வாகங்கள், பள்ளி வாரியங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படுவதாகவும், இதன் மூலம் மாணவர்கள் உரிய உதவிகளைப் பெறுவதை உறுதி செய்வதே நோக்கம் என்றும் அவர் கூறினார்.

இன்று ஆயர் மெர்பாவ் பகுதியில் உள்ள ஜாசின் லாலாங் தமிழ்ப்பள்ளிக்கு வருகை தந்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
மித்ராவின் இத்திட்டங்களின் கீழ் ஜாசின் லாலாங் தமிழ்ப்பள்ளிக்கு 47,560 ரிங்கிட் நிதி வழங்கப்பட்டுள்ளதாக ரமணன் குறிப்பிட்டார்.
மேலும், பாலர் கல்வி முதல் அரசுப் பல்கலைக்கழகங்கள், தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் வரையிலான அனைத்து நிலைகளிலும் பயிலும் இந்திய மாணவர்களுக்காகப் பல்வேறு கல்வி உதவித் திட்டங்களை மித்ரா இவ்வாண்டு அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சியை முழுமையாக ஆதரிக்கும் வகையில், ஒவ்வொரு கல்வி நிலையிலும் அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப இலக்கிடப்பட்ட உதவிகள் வழங்கப்படுவதாக அவர் கூறினார்.
அதேவேளை, தமிழ்ப்பள்ளிகளில் தொழில்நுட்ப வசதிகளையும் டிஜிட்டல் மயமாக்கலையும் விரிவுபடுத்துவதற்கும் மித்ரா தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

