
கோலாலம்பூர், நவ. 7-
கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி நேபாளம் – திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரில் உயிரிழந்த 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு, தலா 10,000 ரிங்கிட் ஒருமுறை நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
தேசியப் பேரிடர் மேலாண்மை முகமை (நட்மா) வழியாக இந்த நிதியுதவி வழங்கப்படும் என்றும், இதற்கான முடிவை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவான கலந்துரையாடலுக்குப் பின்னர் எடுத்ததாகவும் அவர் கூறினார்.
உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நிதியுதவி வழங்கப்படும். அதன்படி, முதலில் கணவர் அல்லது மனைவிக்கும், அடுத்ததாக பெற்றோருக்கும், பின்னர் பிள்ளைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் விளக்கினார்.
கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜாலில் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற 24ஆவது 2026ஆம் ஆண்டு தீபாவளிக் கொண்டாட்டக் கண்காட்சியைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், மலேசிய இந்தியர் சமூக உருமாற்றப் பிரிவின் மித்ரா தலைமை இயக்குநர் கே. ரவேந்திரன் நாயரிடம், நிதி அமைச்சிடமிருந்து தேவையான விவரங்களைப் பெற்று, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விரைவில் தொடர்புகொள்ளுமாறு தாம் அறிவுறுத்தியுள்ளதாக ரமணன் கூறினார்.
இந்நிலையில், திபெத்தின் ல்ஹெண்டே கோலா ஆற்றின் மேல் பகுதியில் பனிப்பாறைகள் மற்றும் பாறைகள் சரிந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் சேற்றுப் பெருக்கில் இதுவரை 1,451 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் உட்பட சுமார் 5,700 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

