
மலாக்கா, நவ 6-
மலாக்கா மாநிலத் தேர்தலில் பாயா ரூம்புட் (Paya Rumput) சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும் டத்தோ அஸ்மான் அபிடின், அப்பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் போக்குவரத்து சிக்னல்களை ஒருங்கிணைக்கப் பரிந்துரைத்துள்ளார்.
தற்போதுள்ள போக்குவரத்து சிக்னல்கள் வாகனங்களைக் கண்டறியும் சென்சார் முறையை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றன. ஆனால், AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் சாலைகளில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ப சிக்னல்களின் நேரத்தைத் தானாகவே மாற்றியமைக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
மேம்பாலங்கள் அமைப்பது அல்லது சாலைகளை விரிவுபடுத்துவது போன்ற திட்டங்களுக்கு அதிக செலவும் நீண்ட கால அவகாசமும் தேவைப்படும். அதற்கு மாற்றாக AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது செலவு குறைந்த தீர்வாக அமையும்.
அலோர் காஜாவிலிருந்து பாயா ரூம்புட் செல்லும் பயணத்தில் தாம் 13 போக்குவரத்து சிக்னல்களைக் கடக்க வேண்டியிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்தப் போக்குவரத்து நெரிசல் குறித்து அப்பகுதி மக்களும் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
பாயா ரூம்புட் பகுதியில் குடியிருப்புத் திட்டங்கள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப சாலை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. எனவே, எதிர்கால போக்குவரத்துத் தேவைகளைக் கருத்தில் கொண்டு நகர்ப்புறத் திட்டமிடலும் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
முதன்முறையாகத் தேர்தலில் போட்டியிடும் அஸ்மான் அபிடின், பாயா ரூம்புட் தொகுதியில் பெரிக்காத்தான் நேஷனல் (PN) வேட்பாளர் ரஃபி அகமது மற்றும் பெர்சாமா கட்சி வேட்பாளர் அப்துல் ரஷித் அபு பக்கர் ஆகியோரை எதிர்கொள்கிறார். மலாக்கா மாநிலத் தேர்தல் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது.

