
மலாக்கா, நவ 6-
மலாக்கா மாநிலத்தின் 16ஆவது சட்டமன்றத் தேர்தலில் , தற்போது தன்னிடம் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளையும் தக்கவைத்துக் கொள்வதில் DAP தீவிர கவனம் செலுத்தி வருவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
அதன்படி, கோத்தா லக்சாமானா (Kota Laksamana), பண்டார் ஹிலிர் (Bandar Hilir), கெசிடாங் (Kesidang) மற்றும் ஆயர் கெரோ (Ayer Keroh) ஆகிய நான்கு தொகுதிகளையும் மீண்டும் கைப்பற்றுவதே DAP-இன் முக்கிய இலக்காகும்.
இதற்கிடையில், டுயோங் (Duyong), காடெக் (Gadek) மற்றும் பெங்காலான் பத்து (Pengkalan Batu) ஆகிய மூன்று தொகுதிகளையும் கூடுதலாகக் கைப்பற்ற DAP முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்தத் தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவும் என்பதை அறிந்திருந்தாலும், வெற்றிபெற முழு முயற்சியுடன் செயல்படுவோம்.
மேலும், இம்முறை தேர்தலில் பாரிசான் நேஷனல் (BN) மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் (PN) ஆகிய கட்சிகள் ஒன்றுக்கொன்று எதிராகப் போட்டியிடாமல், தங்களது ஆதரவாளர்களை ஒரே அணியின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கக் கோருவது பக்காத்தான் ஹராப்பானுக்கு (PH) சவாலாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், மக்களின் ஆதரவைப் பெறுவதற்குத் தேர்தல் களத்தில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

