
மலாக்கா, நவ 6-
மலாக்கா மாநிலத் தேர்தலை முன்னிட்டு புதிய வாக்குறுதிகளை வழங்குவதற்காகத் தாம் வரவில்லை என்றும், மத்திய அரசு ஏற்கெனவே செய்துள்ள சாதனைகள் மற்றும் கொள்கைகளை மக்களிடம் விளக்கவே வந்துள்ளதாகவும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இன்று புக்கிட் ரம்பாயில் நடைபெற்ற ஜெலாஜா அஸ்பிராசி மடானி நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மலாக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பு அவசியம் என்றார்.
மலாக்கா மக்களின் உள்ளூர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், வளர்ச்சித் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்தவும் புத்ராஜெயாவுடன் இணைந்து செயல்படக்கூடிய வேட்பாளர்களுக்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அதேவேளை, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கும் மத்திய அரசு உதவிகளை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டார்.
பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துதல், சுகாதார வசதிகளை வலுப்படுத்துதல், குடும்ப வருமானத்தை உயர்த்துதல் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குதல் ஆகியவை அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமைகள் என அவர் தெரிவித்தார்.
மேலும், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தாலும், மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை என்பதை ஒப்புக்கொண்ட அன்வார், வடிகால் பராமரிப்பு, தண்ணீர் விநியோகத் தடைகள், கிராமப்புற மின்சாரப் பற்றாக்குறை மற்றும் பள்ளிக் கழிப்பறைகளின் மோசமான நிலை போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியுள்ளதாகக் கூறினார்.
கூகுள் நிறுவனத்தின் RM61 பில்லியன் முதலீடு உள்ளிட்ட வெளிநாட்டு முதலீடுகள் மூலம் இளைஞர்களுக்குத் திறன் சார்ந்த வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். அரசாங்கம் தனது பொறுப்புகளை நிறைவேற்றத் தவறினால் மக்கள் தம்மைப் பொறுப்பேற்கச் செய்யலாம் என்றும் அன்வார் கூறினார்.

