
கோலாலம்பூர், நவ 7
இந்தோனேசியா, மலேசியாவிலிருந்து ஏற்றப்பட்ட செம்பனை எண்ணெய் சரக்குகள் எகிப்துக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு கலக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட Olam Global Agri Pte Ltd நிறுவனத்திடம் Maritime Network விளக்கம் கோரியுள்ளது.
இதுதொடர்பாக, கடந்த அக்டோபர் 29ஆம் தேதி தனது சட்ட நிறுவனமான Jaya Prem Chambers மூலம் Olam Global நிறுவனத்துக்கு சட்டக் கோரிக்கை கடிதத்தை (LOD) Maritime Network அனுப்பியுள்ளது.
MT Eunice கப்பலில் இந்தோனேசியாவிலிருந்து சுமார் 35,432 மெட்ரிக் டன் பாமாயில் பொருட்கள் கொண்டு வரப்பட்டதுடன், கிள்ளான் துறைமுகத்தில் கூடுதலாக 4,999.715 மெட்ரிக் டன் கச்சா பாமாயில் ஒலியீன் ஏற்றப்பட்டுள்ளது.
இந்த இரு நாடுகளின் சரக்குகளும் கலக்கப்பட்டிருக்கலாம்.
இந்தோனேசிய சரக்கின் எண்ணெய் தரம் குறித்து அறிவிக்கப்பட்ட தகவல்கள் சரியானவையா என்றும் Maritime Network கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், சரக்குகள் கலக்கப்படுவது குறித்து முன்கூட்டியே தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டதாக Olam Global தரப்பில் கூறப்படுவதை Maritime Network மறுத்துள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் ஆவண ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், மலேசிய சரக்குகளை Mewah Oils நிறுவனத்திடமிருந்து FOB ஒப்பந்த அடிப்படையில் வாங்கியதாக Olam Global தனது மின்னஞ்சல்களில் குறிப்பிட்டுள்ளது.
எனவே, கப்பலின் சரக்குகளை வாடகைக்கு எடுத்த நிறுவனமாக Olam Global-ன் பங்கு என்ன, சரக்குகளைக் கலப்பது தொடர்பாக ஏதேனும் உத்தரவுகள் வழங்கப்பட்டனவா என்பது குறித்து Maritime Network விளக்கம் கோரியுள்ளது.
சட்டக் கடிதம் கிடைத்த ஏழு நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அவ்வாறு நிரூபிக்க முடியாவிட்டால் Maritime Network-க்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரத்தால் ஏற்படக்கூடிய இழப்புகள் மற்றும் சட்டரீதியான கோரிக்கைகளுக்கு இழப்பீட்டு உத்தரவாதம் வழங்க வேண்டும் என்றும் Maritime Network கோரியுள்ளது.
இருப்பினும், இதில் ஏதேனும் விதிமீறல் நடைபெற்றுள்ளதா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், உரிய ஆதாரங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி மதிப்பிட வேண்டும் என்றும் சட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.

