


கிள்ளான், நவ.15: சிலாங்கூர் மாநிலத்தில் இன, மத வேறுபாடுகளைக் கடந்து அனைத்து மக்களும் ஒற்றுமையுடனும் பரஸ்பர மரியாதையுடனும் வாழ்வதை உறுதிப்படுத்துவதில் மாநில அரசு தொடர்ந்து கவனம் செலுத்தும் என மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
பல இனங்கள் மற்றும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் ஒருவரையொருவர் மதித்து, அவர்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறைகளைப் புரிந்துகொண்டு வாழ்வதே மாநிலத்தின் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் அடித்தளமாக அமையும் என அவர் வலியுறுத்தினார்.
ராயா, சீனப் புத்தாண்டு, கிறிஸ்துமஸ் மற்றும் தீபாவளி உள்ளிட்ட அனைத்து இன மக்களின் முக்கியப் பண்டிகைகளையும் சிலாங்கூர் மாநிலம் ஒன்றிணைந்து கொண்டாடி வருவதாகக் குறிப்பிட்ட அவர், குறிப்பாகத் தீபாவளி இந்தியச் சமூகத்தின் கலாச்சாரம், வாழ்க்கை முறை மற்றும் பாரம்பரியத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகை என்றார்.
நேற்று இரவு கிள்ளான் டத்தாரானில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில அளவிலான தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், இன்னும் சுமார் 30 ஆண்டுகளில் சிலாங்கூர் தனது 100-ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடவுள்ள நிலையில், அதற்குள் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மேலும் முன்னேறிய, போட்டித்தன்மை மிக்க மாநிலமாக உருவெடுக்க வேண்டும் என்பதே மாநில அரசின் இலக்கு என அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், இந்நிகழ்ச்சியில் சிலாங்கூரில் உள்ள 87 தமிழ்ப்பள்ளிகளுக்கு மொத்தம் RM5 மில்லியன் நிதியுதவி வழங்கப்பட்டது. அதேபோல், ஐந்து மத வழிபாட்டுத் தலங்களுக்கான சிலாங்கூர் நிதியுதவித் திட்டத்தின் (LIMAS) கீழ் RM2.012 மில்லியன் ஒதுக்கீடும் வழங்கப்பட்டது.
மேலும், சிலாங்கூர் இந்தியத் தொழில்முனைவோருக்கான உபகரண உதவித் திட்டமான i-SEED வாயிலாக 200 இந்தியத் தொழில்முனைவோருக்கும் உதவிகள் வழங்கப்பட்டன.
சிலாங்கூர் மாநில வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் இந்தியச் சமூகத்தையும் முழுமையாகச் சென்றடைவதை உறுதிப்படுத்த மாநில அரசு விரும்புவதாகத் தெரிவித்தார்.
இதற்கிடையில், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதிராவ் சார்பில் வாசிக்கப்பட்ட உரையில், இந்தியச் சமூகத்தின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கும் மாநில அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டது.
குறிப்பாக, 2027-ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் மாநில வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் மற்றும் வேலை தேடுவோர், குறிப்பாக இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், வேலை வழங்குநர்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
அதேவேளையில், தொழில்துறைகளின் தேவைகளுக்கு ஏற்ப இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தி, வேலைவாய்ப்புச் சந்தையில் அவர்களின் போட்டித்தன்மையை அதிகரிப்பதிலும் மாநில அரசு கவனம் செலுத்தும் என்றார் அவர்.

